தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சி: பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்

4 குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில், பெற்றோரை இழந்த 4 குழந்தைகள் வாழ்வைத் தொடர அரசின் உதவியை எதிர்நோக்கியுள்ளனர். குழந்தைகளின் தாயார் வசந்தா 7 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், கூலித் தொழிலாளியான தந்தை கமலக்கண்ணன், தனது குழந்தைகளை கவனித்து வந்தார்.

குடும்பச் சூழலால் மூத்த மகள் லாவண்யா முதலாம் ஆண்டுடன் பொறியியல் படிப்பை நிறுத்திவிட்டு, கோவையில் வேலை செய்கிறார். 10 மற்றும் 8ம் வகுப்புடன் ரீனா, ரீஷிகா இருவரும் படிப்பை நிறுத்திவிட்டனர். கடைசி மகன் அபினேஷ் மட்டும் அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்துவருகிறார். இதற்கிடையே, அவரும் கல்லீரல் பாதிப்பால் சமீபத்தில் உயிரிழந்தார்.

தந்தை கமலக்கண்ணன் உடலை அடக்கம் செய்ய, இறுதிச் சடங்கிற்கு கூட பணம் இல்லாததால் ஊர் மக்கள் ஒன்று கூடி பணம் திரட்டி, இறுதிச் சடங்கு செய்துள்ளனர். பெற்றோரை இழந்த 4 குழந்தைகள் வாழ்வைத் தொடர அரசின் உதவியை எதிர்நோக்கி இருந்தனர்.

இந்த நிலையில், பெற்றோரை இழந்து அரசின் உதவியை எதிர்நோக்கிய குழந்தைகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் பேசி, ஆறுதல் கூறினார். அத்துடன், 4 குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தொலைபேசி மூலம் முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.