சென்னை,
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக செய்தித்தாள்கள், செய்தி தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச்செயலாளர் மற்றும் மாவட்ட கலெக்டரின் கருத்துக்களைக் கேட்டு விளக்கம் அளிக்கும்படி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதிவில் தெரிவித்திருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும், அந்தப் புகாரில் “Inappropriate Advances” மற்றும் “Unwarranted Messages” குறித்த குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளதாகவும் ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மாவட்டத்தின் நிர்வாகத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கே இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ள செய்தி, தமிழகம் இதுவரை கண்டிராத ஒன்று.
இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளும், நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்களும் மிகுந்த கவனத்துடன் விசாரிக்கப்பட வேண்டியவை. குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை எவ்வித அரசியல் தலையீடுமின்றி, வெளிப்படையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.
இந்த விவகாரத்தில் உரிய விசாரணையும் கடுமையான நடவடிக்கையும் எடுக்கத் தவறினால், அரசு நிர்வாகத்தின் மீதும், குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தமிழக அரசின் மீதும் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை கேள்விக்குறியாகிவிடும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.