கடலூர்,
பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் கள்ளக்குறிச்சி தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷூக்கு உயர் பாதுகாப்பு அறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். இவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை அடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு உயர் பாதுகாப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு அறை என்றாலும் அங்கு சொகுசு வசதிகள் எதுவும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்பி செல்லும் அபாயம் உள்ள கைதிகள், மற்ற கைதிகளால் உயிருக்கு ஆபத்து உள்ள கைதிகள், பாதுகாப்பு அடிப்படையில் கூடுதல் கண்காணிப்பு தேவைப்படும் கைதிகள் ஆகியோர் இந்த உயர் பாதுகாப்பு அறையில் தங்க வைக்கப்படுவார்கள்.
பொதுவாக சிறையின் மற்ற பகுதிகளில் உள்ள ஒவ்வொரு அறைகளிலும் தலா 10 கைதிகள் வரை தங்க வைக்கப்படுவார்கள். ஆனால் இந்த உயர் பாதுகாப்பு பகுதியில் தனித்தனி சிறை அறைகள், கழிப்பறை மற்றும் குளியல் அறை வசதிகள் உள்ளன. உணவு மற்றும் மருத்துவ வசதிகளைப் பொறுத்தவரை மற்ற கைதிகளுக்கு கிடைப்பதுதான் இங்கும் வழங்கப்படும்.
மேலும் இந்த பகுதியில் கூடுதல் கண்காணிப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். இங்கு உள்ள கைதிகளை மற்ற பகுதியில் இருந்து வரும் கைதிகளை பார்க்கவோ அல்லது இங்குள்ள கைதிகள் மற்ற பகுதி கைதிகளை பார்க்கவோ அனுமதி இல்லை. கைதிகளின் பாதுகாப்பையும், சிறையின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காகவே இந்த சிறப்பு பாதுகாப்பு பகுதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.