ஆழமான கிணறு 
தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சி: கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவர் உயிரிழப்பு

தண்ணீரில் மூழ்கிய மாணவரை மீட்டெடுக்க அங்கிருந்தவர்கள் உடனடியாக முயற்சித்தனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை அருகே கிணற்றை எட்டிப் பார்த்தபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி உள்ளே விழுந்த 15 வயது மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெற்றோரை பார்க்க சென்றபோது சோகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை அடுத்த புகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் சஞ்சய் (வயது 15). அந்த மாணவனின் பெற்றோர், அங்குள்ள ஒரு பகுதியில் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் சஞ்சய் தனது பெற்றோர் இருக்கும் இடத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஆழமான கிணறு ஒன்றை அவர் ஆர்வம் காரணமாக எட்டிப் பார்த்துள்ளார்.

தண்ணீரில் மூழ்கி மரணம்

எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய சஞ்சய், ஆழமான அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தார். தண்ணீரில் மூழ்கிய அவரை மீட்டெடுக்க அங்கிருந்தவர்கள் உடனடியாக முயற்சித்தனர். எனினும், கடுமையான போராட்டத்திற்குப் பிறகு அவர் சடலமாகவே மீட்கப்பட்டார். இந்த விபத்து அவரது பெற்றோர் மற்றும் புகைப்பட்டி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

போலீசார் விசாரணை

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.