சென்னை,
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக எழுந்துள்ள புகார் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:-
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து விளக்கம் அளித்திருக்கிறார். சிசிடிவி காட்சிகளைப் பாருங்கள், செல்போனை சோதித்துப் பாருங்கள், நான் அப்படியெல்லாம் செய்யவில்லை என்று சொல்கிறார். அப்படி இருக்கும்போது அவரை ஏற்கெனவே குற்றவாளியாக முடிவு செய்துவிட்டதைப் போல பேசுவது எந்த வகையில் நியாயம்?
ஒரு வாட்ஸ்அப் செய்தி வந்துவிட்டது என்பதற்காக எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டுமா? யார் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்? யார் புகார் கொடுத்திருக்கிறார்கள்? யாரை நீங்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்கிறீர்கள்? சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. விளக்கம் அளித்த பிறகும் அவரை குற்றவாளியைப் போல சித்தரிப்பதுதான் மீடியா ட்ரையல்.
உதயநிதி பேசிய பேச்சை இன்னொரு முறை போட்டுப் பாருங்கள். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அந்தக் காட்சிகள் இருக்கின்றன. உதயநிதி பேசியது அயோக்கியத்தனமான பேச்சு. அருவருக்கத்தக்க பேச்சு. தஞ்சாவூரில் 2,000 பேருக்கு முன்னால் ஒரு பெண்ணைப் பற்றி உதயநிதி பேசிய பேச்சை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்களை அவ்வளவு இழிவாகவும், அதிகார மமதையுடனும் பேசுவது அருவருக்கத்தக்கது.
ஆனால் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அதுபோன்று பேசியதற்கோ, செய்ததற்கோ ஏதாவது சாட்சி இருக்கிறதா? இருந்தால் காட்டுங்கள். ஆதாரத்தைக் கொடுங்கள். உதயநிதி பொதுவெளியில் பேசிய பேச்சையும், தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுக்கும் எம்.எல்.ஏ. விவகாரத்தையும் ஒப்பிடுவது அதிர்ச்சியாக இருக்கிறது. நடந்த ஒரு சம்பவத்தையும், இன்னும் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டையும் ஒன்றாக ஒப்பிடுவது தவறான உதாரணம்.
கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. பாவம். நான் அப்படியெல்லாம் பேசவில்லை, எதுவாக இருந்தாலும் சிசிடிவி காட்சிகளைப் பாருங்கள் என்று சொல்கிறார். அவர் இல்லை என்று மறுக்கும்போது, அவர் தவறு செய்துவிட்டதாகவே முடிவு செய்து பேசுவது சரியல்ல.
மாவட்ட கலெக்டர் தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்ததாகச் சொல்கிறீர்கள். அதற்கான புகார் இருக்கிறதா? எங்கே புகார் அளிக்கப்பட்டுள்ளது? அதைப் பற்றிய தகவல்களைச் செய்தியாக வெளியிடுங்கள்.
மாவட்ட கலெக்டரும், தலைமைச் செயலாளரும் தினமும் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். மாவட்ட நிர்வாகம் தொடர்பாக அவர்களுக்குள் தகவல் பரிமாற்றம் நடைபெறும். அதை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வர முடியாது.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அளித்த விளக்கத்தை நான் பார்த்தேன். அந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா என்பதை நீங்களும் நானும் முடிவு செய்ய வேண்டும். ஆனால் அவர் தவறு செய்துவிட்டதைப் போல முன்கூட்டியே விசாரணை நடத்தி முடிவெடுப்பது எந்த வகையில் நியாயம் என்பதுதான் என்னுடைய கேள்வி.
நான் யாருக்கும் சப்பைக்கட்டு கட்டவில்லை. இரண்டு, மூன்று வெவ்வேறு சம்பவங்களை ஒன்றாகக் கலந்து கேள்வி கேட்கிறீர்கள். அவற்றைத் தனித்தனியாக பார்க்க வேண்டும்.
துணை சபாநாயகர் மீதான தாக்குதல் புகாரை பொறுத்தவரை, பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தால், காவல்துறை அதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். யாராக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் புகார் அளித்தால், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதில் மாற்றுக் கருத்து இல்லை.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரம் வேறு, துணை சபாநாயகர் மீதான புகார் வேறு. இரண்டையும் ஒன்றாகக் கலந்து, குற்றச்சாட்டுக்கு உள்ளான அனைவரும் குற்றவாளிகள் என்று முடிவு செய்வது சரியல்ல. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். அதை ஆராய வேண்டும். அதற்கு முன்பாகவே அவர் குற்றம் செய்துவிட்டதாக சித்தரிப்பதைத்தான் நான் எதிர்க்கிறேன்
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேசுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, சுதா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.