தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சி: தூங்கிக் கொண்டிருந்தபோது கட்டுவிரியன் பாம்பு கடித்து 2 பெண் குழந்தைகள் உயிரிழப்பு

தாய் புஷ்பா தனது குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள போக்கனூர் ஏரிக்கரையோரம் வசித்து வருபவர் சந்திரன். இவரது மனைவி புஷ்பா, இவர்களுக்கு தேவதர்ஷினி (3) மற்றும் தேவஜனனி (1.5) ஆகிய இரு பெண் குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு புஷ்பா தனது குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது வீட்டிற்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு ஒன்று தூங்கிக் கொண்டிருந்த மூவரையும் கடித்துள்ளது. தூக்க கலக்கத்தில் பாம்பு கடித்ததை உணர்ந்த புஷ்பா அலறினார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மூவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் மூவருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும், பாம்பின் விஷம் குழந்தைகளின் உடல் முழுவதும் பரவி 2 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, தாய் புஷ்பாவுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காகக் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்து 2 பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT