கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே சொத்துத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில், பெரியப்பாவைக் கீழே தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் வட்டத்திற்கு உட்பட்ட நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவருக்கும் இவரது தம்பி மகன் தணிகைவேல் என்பவருக்கும் இடையே பூர்வீக சொத்தைப் பிரிப்பது தொடர்பாக நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) சொத்து விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில், ஆத்திரமடைந்த தணிகைவேல் தனது பெரியப்பா பாலசுப்ரமணியத்தைக் கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பாலசுப்ரமணியத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தியாகதுருகம் போலீசார், உயிரிழந்த பாலசுப்ரமணியத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தணிகைவேலைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.