தமிழக செய்திகள்

வைகை ஆற்றில் கள்ளழகர்: பாமரரையும் பட்டணத்தாரையும் பக்தியில் இணைக்கும் உன்னதவிழா: கவர்னர் அர்லேகர்

பச்சை பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.

சென்னை,

மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று அதிகாலையில் கோலாகலமாக நடைபெற்றது. தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் இருந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் புறப்பட்ட அழகர், அதிகாலை பச்சை பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார்.

அப்போது கூடியிருந்த பக்தர்கள் "கோவிந்தா" முழக்கத்துடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர். வைகையில் எழுந்தருளிய கள்ளழகரை வெள்ளிக் குதிரை வாகனத்தில் வீரராகவப் பெருமாள் வரவேற்றார். காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இந்த நிலையில், கள்ளழகர் வைபவம் குறித்து தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வு, சித்திரை பௌர்ணமியன்று மதுரையில் வைகை ஆற்றில், அழகர் இறங்கும் வைபவம். பாமரரையும் பட்டணத்தில் உள்ளோரையும் பக்தியில் இணைக்கும் ஓர் உன்னதவிழா.

தவளையாக சாபம் பெற்ற மண்டூகமகரிஷிக்கு விமோசனம் கொடுக்க சுந்தரராஜப் பெருமாள், கள்ளழகர் வேடமிட்டுத் தங்கக்குதிரையில் வைகை ஆற்றில் எழுந்தருள, பக்தர்கள் காவல் தெய்வமான கருப்பசாமி வேடத்தில் இசைக்கேற்ப ஆடுவதும், தண்ணீர் பீய்ச்சி அடிப்பதும் காணக் கண்கொள்ளாக் காட்சி.

திருக்கண் எழுந்தருளலும், தெருதோறும் அன்னதானமும் மனதையும் வயிறையும் நிறைவு செய்யும். இவ்விழாவைக் கொண்டாடும் மதுரை மக்களை வாழ்த்துவதோடு, நல்லமழை பெய்து நானிலம் சிறக்க நானும் வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.