சென்னை,
ஈரானுக்கு எதிரான போரை அமெரிக்கா மேலும் வலுவாக்கி வரும் நிலையில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு 30 நாட்கள் அமெரிக்கா கட்டுப்பாடுகளுடன் கூடிய விலக்கு அளித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன.
இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் மாநிலங்களவை எம்.பியுமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து உத்தரவுகளை பெறுபவர்கள் இந்திய மக்கள் அல்ல என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியதாவது:-
அமெரிக்காவின் ஜனாதிபதிக்கு நாங்கள் இந்திய மக்கள், சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாட்டை சேர்ந்தவர்கள். எங்கோ தொலைதூரங்களில் வெளிநாட்டின் கரைகளில் இருந்து வரும் உத்தரவுகளை எப்போதுமே ஏற்பதில்லை.
எனவே நீங்கள் உங்கள் வேலையை உங்களின் திறமைக்கு ஏற்றவாறு செய்யுங்கள். உலக அமைதிக்கான ஒரே அடித்தளம் என்பது இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர மரியாதை ஆகும்.
உங்களுக்கும் உங்கள் நாட்டு மக்களுக்கும் அமைதி செழிப்பு கிடைக்க கமல்ஹாசன் என்கிற பெருமைமிகு இந்தியன் வாழ்த்துகிறேன் என அதில் பதிவிட்டுள்ளார்.