தமிழக செய்திகள்

717 மதுக்கடைகளை மூட அனுமதி அளித்த முதல்வர் விஜய்க்கு கமல்ஹாசன் வாழ்த்து

தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் 4,829 'டாஸ்மாக்' மதுகடைகள் இயங்கி வருகின்றன. மாதம் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.48 ஆயிரத்து 344 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆனால் மதுவால் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதால், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வழிபாட்டு தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பஸ்-ரெயில் நிலையம் அருகே 500 மீட்டர் தொலைவுக்குள் செயல்படும் 255 'டாஸ்மாக்' கடைகளை 2 வாரங்களுக்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 717 மதுக்கடைகளை மூட அனுமதி அளித்த முதல்வர் விஜய்க்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டு மற்றும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் மநீம தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

"வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகேயுள்ள மதுபான விற்பனைக் கடைகளை அகற்ற வேண்டுமென்பது தமிழ்க் குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், இந்த நடவடிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் அவர்கள் பதவிக்கு வந்தவுடனேயே எடுத்திருக்கிறார்.

மதுபானம் விற்பனை ஓர் அரசாங்கத்தின் பணியாக என்றுமே இருக்கக்கூடாது; மதுப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைத்தான் அரசு கைக்கொள்ள வேண்டும். இந்த நிலையை நோக்கி தமிழ்நாடு அரசு நகர வேண்டும். இன்று 717 மதுக்கடைகள் மூடல் என்று தொடங்கியிருக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கை தொடரப்படவேண்டும்.

வாழ்த்துகள்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.