தமிழக செய்திகள்

கம்பன் எக்ஸ்பிரஸ் வழித்தடம் மாற்றம்: பொதுமக்கள் போராட்டம்

கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலின் வழித்தடத்தை மாற்றியதை கண்டித்து திருவாரூரில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருவாரூர்,

காரைக்காலில் இருந்து திருவாரூர் வழியாக சென்னைக்கு கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வழித்தடத்தை மாற்றி சமீபத்தில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டது. இந்த புதிய அறிவிப்பின்படி, ரெயிலானது திருவாரூர் ரெயில் நிலையம் வராது என்பதால், திருவாரூரை சேர்ந்த பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

திருவாரூரில் இருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு பயணம் செய்யும் பொதுமக்கள், மற்றும் வர்த்தகர்கள் என பல்வேறு தரப்பினரும் பெருமளவில் பயன்படுத்தி வரும் கம்பன் ரெயில் சேவையை தொடர்ந்து திருவாரூருக்கு இயக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திருவாரூர் புதிய ரெயில் நிலையம் முன்பாக வர்த்தகர்கள் அனைத்துக் கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் அனைத்து சேவை சங்கத்தினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.