சென்னை,
முல்லைப் பெரியாறு அணை உரிமைக்காகப் பல்வேறு சட்டப் போராட்டங்களை முன்னெடுத்த ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் கம்பம் கே.எம். அப்பாஸ் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
முல்லைப் பெரியாறு அணை உரிமைக்காகப் பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்திய போராளியும், ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவருமான கம்பம் கே.எம். அப்பாஸ் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்பதையறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
சிறந்த எழுத்தாளருமான அப்பாஸ் அவர்கள், முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக நூல்களையும் எழுதியவர். கம்பம் வாவேர் பள்ளிவாசல் ஜமாத் கமிட்டித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முதலில் 142 அடியாகவும், பின்னர் 152 அடியாகவும் உயர்த்த வேண்டும் என்ற 2006-ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த கோரி கம்பம் கூடலூரில் மருத்துவர் தலைமையில் கொட்டும் மழையில் நடைபெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்.
பெரியவர் கம்பஸ் அப்பாஸ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், முல்லைப் பெரியாறு போராட்டக் குழுவினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.