தமிழக செய்திகள்

காஞ்சிபுரம்: 5 மாத கர்ப்பிணி கழுத்தை நெரித்துக்கொலை - கணவருக்கு போலீசார் வலைவீச்சு

கணவன், மனைவி இடையே திடீரென குடும்ப தகராறு ஏற்பட்டது.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் அருகே குடும்பத் தகராறில் 5 மாத கர்ப்பிணி பெண் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

5 மாத கர்ப்பிணி

காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 28). இவர் ஊர்க்காவல் படையில் வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சோனியா (28) என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது சோனியா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

கழுத்தை நெரித்து கொலை

இந்த நிலையில், கணவன், மனைவி இடையே திடீரென குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சோமசுந்தரம், தனது மனைவி சோனியா என்றும் பாராமல் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து அவர் தப்பியோடி தலைமறைவாகிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோனியாவின் உடலைக் கைப்பற்றினர். பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீசார் வலைவீச்சு

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய ஊர்க்காவல் படை வீரர் சோமசுந்தரத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.