சென்னை,
கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார திருநாளை முன்னிட்டு, தமிழக மக்கள் அனைவருக்கும் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதில் தெரிவித்திருப்பதாவது:-
அறம், பக்தி, வீரம், ஞானம் ஆகியவற்றின் திருவுருவமாக விளங்கும் தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அவதாரத் திருநாளான இனிய கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, தமிழக மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தீமைகளை அழித்து நன்மைகளை நிலைநாட்டிய வேலனின் திருவருளால், அனைவரது வாழ்விலும் தைரியம், மனவலிமை, அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சி பெருகட்டும். நம் வாழ்வின் தடைகள் அனைத்தும் நீங்கி, வெற்றியும் நிம்மதியும் நிறைந்திடட்டும்.
சூரபத்மனை வதம் செய்து, அநீதியை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய முருகப்பெருமானின் வீரத்தையும் திருப்பெருமையையும் போற்றும் சூரசம்ஹாரத் திருநாளில், தீமைகள் அகன்று நன்மைகள் தழைத்தோங்கட்டும். முருகப்பெருமானின் வெற்றியும் வேலின் மகிமையும் நம் அனைவருக்கும் நம்பிக்கையையும் மனவலிமையையும் அளிக்கட்டும். சூரசம்ஹாரத் திருநாள் நல்வாழ்த்துகள்!
முருகப்பெருமானின் அருளும் ஆசியும் அனைவருக்கும் கிடைத்து, இல்லங்கள் தோறும் அன்பும், ஒற்றுமையும், ஆனந்தமும் நிறைந்திட இந்த இனிய கந்த சஷ்டி திருநாளில் மனதாரப் பிரார்த்திக்கிறேன். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.