தமிழக செய்திகள்

கந்தசஷ்டி விழா: திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

கோவில் வளாகத்தில் திரளான பக்தர்கள் தங்கியிருந்து விரதம் இருந்து வருகின்றனர்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது. விழாவையொட்டி அங்கு பக்தர்கள் குவிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கந்தசஷ்டி திருவிழா

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் கந்தசஷ்டி திரு விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 10-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் திரளான பக்தர்கள் தங்கியிருந்து விரதம் இருந்து வருகின்றனர்.

விழா நாட்களில் தினமும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. இரவில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் கிரிப்பிரகாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்று சூரசம்ஹாரம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். தொடர்ந்து கடற்கரையில் சுவாமி ஜெயந்தி நாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் சந்தோஷ மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. தொடாந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் கிரிப்பிரகாரத்தில் உலா வந்து கோவிலை சேர்ந்த பின் அங்கு சாயாபிஷேகம் நடைபெறுகிறது.

பக்தர்கள் குவிந்தனர்

விழாவையொட்டி கோவிலில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மேலும், கோவில் வளாகத்தில் உள்ள தற்காலிக கூடாரங்களில் தங்கி விரதம் இருக்கும் பக் தர்களுக்கும் பக்தி பாடல்கள் பாடி முருகனை வழிபட்டு வருகிறார்கள். பல்வேறு சுவாமி வேடமணிந்த பக்தர்களும் கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர். கோவில் முழுவதும் வண்ண மின்விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு உள்ளதால் விழா களைகட்டி உள்ளது.

சூரசம்ஹாரத்தைக் காண வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கடற்கரையில் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து, அதில் இருந்தவாறு போலீசார் கண்காணிக்கின்றனர். விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் தலைமையில் சுமார் 4,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவில் வளாகம், கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கடலில் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாதவாறு மிதவை தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

நாளை, திருக்கல்யாணம்

7-ம் திருநாளான நாளை (திங்கட்கிழமை) இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் அருணாசலம் மற்றும் அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT