கோவை,
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 15-ந் தேதி பிற்பகல் 3 மணியளவில் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதால் பக்தர்கள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கந்த சஷ்டிவிழாவை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் படிக்கட்டுப்பாதை மற்றும் கோவில் பஸ்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், வருகிற 15 மற்றும் 16-ந்தேதிகளில் மலைப்பாதையில் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி சுவாமி தரிசனம் செய்யும் வகையில் கூடுதல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.