திருப்போரூர்,
திருப்போரூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது கொடி அறுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா நேற்று காலை பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
6 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் முருகப்பெருமான் பல்லக்கு, ஆட்டுக்கிடா உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கைகளுடன் மாடவீதிகளில் உலா வருவார். அப்போது அசுர உருவ பொம்மைகளும் வீதிகளில் வலம் வரும்.
விழாவின் ஆறாம் நாளான வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை, முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதனை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், மறுநாள் திங்கட்கிழமை மாலை நடைபெற உள்ள தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சியிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். கந்த சஷ்டி விழாவையொட்டி தினமும் லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், நேற்று காலை சுமார் 5.30 மணியளவில் கோவிலில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கொடிமரத்தில் ஏற்றப்பட்ட கொடி திடீரென அறுந்து கீழே விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக ஏணி மூலம் கொடிமரத்தில் கொடிக்கயிறு கட்டப்பட்டு, பரிகாரங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் கொடி ஏற்றப்பட்டது. கொடிக்கயிற்றின் தரம் குறைவாக இருந்ததால் அது அறுந்ததாக கூறப்படுகிறது.