சென்னை,
பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில், கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி (தனி) த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரான அருள் விக்னேஷ் (வயது 36), தனது செல்போனில் இருந்து கடந்த ஜூலை மாதம் பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினார். இதுகுறித்து பெண் கலெக்டர் கொடுத்த புகாரின் பேரில் அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ. மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷனாஸ் விசாரணை மேற்கொண்டார்.
இதற்கிடையே இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிருஷ்டி சிங், கண்காணிப்பு அதிகாரியாக ஐ.ஜி. காமினி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டிலிருந்த எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்
இந்நிலையில் கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. கைது குறித்து கனிமொழி எம்.பி. விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
ஒருவழியாக, அது நடந்துவிட்டது. அவரைக் கைது செய்வதற்காக பூமியின் நிலத்தட்டுகள் நகரும் வரை அல்லது வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வரும் வரை காத்திருக்கிறார்களோ என்று நினைக்கத் தொடங்கிவிட்டேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.