தமிழக செய்திகள்

கன்னட அமைப்பு ஆர்ப்பாட்டம்: ஓசூர் எல்லையில் தமிழக பேருந்துகள் நிறுத்தம்

தமிழக-கர்நாடக எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஓசூர்,

மேகதாது அணை

கர்நாடகம்-தமிழ்நாடு இடையே நீண்ட காலமாக காவிரி நதி நீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக பிரச்சினை நீடித்து வருகிறது. இதற்கிடையில், காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு தொடந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடக அரசின் அணை கட்டும் திட்டத்தை கண்டித்து தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பேருந்துகள் நிறுத்தம்

இந்த நிலையில், காவிரி விவகாரத்தில் எல்லைப் பகுதியில் கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதால், தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா நோக்கிச் செல்லும் பேருந்துகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓசூர் எல்லை பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதேவேளையில், கர்நாடகாவிலிருந்து தமிழ்நாடு நோக்கி வரும் பேருந்துகள் வழக்கம்போல தடையின்றி இயங்கி வருகின்றன.

போலீசார் குவிப்பு

மற்றபடி கார், சரக்கு வாகனங்கள் வழக்கமாக சென்று வருகின்றன. ஓசூரிலிருந்து கர்நாடகாவுக்குச் செல்லும் பயணிகள் தமிழக மாநில எல்லை வரை செல்லும் நகரப் பேருந்துகளில் சென்று அங்கிருந்து ஆட்டோக்கள் மூலம் அத்திப்பள்ளிக்குச் சென்று பின்னர் அங்கிருந்து பெங்களூரு செல்கின்றனர். மேலும் தமிழக-கர்நாடக எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.