கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி வனத்துறையினர் பொய்கைக் காட்டுப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது விலங்குகளை வேட்டையாட முயன்ற ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 24), சுரேஷ்(40) ஆகிய 2 பேரும் விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் பதுங்கியிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்சொன்ன 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்த வனத்துறையினர், அவர்கள் வேட்டையாடப் பயன்படுத்திய அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக் காப்பாளர் அன்பு உத்தரவின்படி, பிடிபட்ட 2 பேர் மீதும் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வேட்டையாட முயன்ற குற்றத்திற்காக 2 பேருக்கும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து வனத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வனத்துறையினர் சிறையில் அடைத்தனர். வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மற்றும் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வனத்துறை எச்சரித்துள்ளது.