கன்னியாகுமரி,
கிழக்கின் லூர்து நகர் என்று அழைக்கப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா திருத்தலத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, புதிய ரெயில் சேவைகளை தொடங்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம், தெற்கு ரெயில்வே பொது மேலாளர் மற்றும் ரெயில்வே வாரியத்திற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
மதுரை-புனலூர் ரெயில் நீட்டிப்பு: தற்போது இயக்கப்பட்டு வரும் மதுரை-புனலூர் விரைவு ரெயிலை (16729/16730) திருச்சி மற்றும் தஞ்சாவூர் வழியாக வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும். இதன் மூலம் தென் தமிழகம் மற்றும் கேரள பகுதி மக்கள் நேரடியாக வேளாங்கண்ணி செல்ல வழிவகை ஏற்படும்.
புதிய சென்னை பகல்நேர ரெயில்: வேளாங்கண்ணி வந்தடையும் மேற்கண்ட ரெயில் பெட்டிகளைப் பயன்படுத்தி, வேளாங்கண்ணி- சென்னை தாம்பரம் இடையே புதிய தினசரி பகல்நேர விரைவு ரெயிலை இயக்க வேண்டும். மேலும், மதுரை-சென்னை எழும்பூர் வாரமிருமுறை ரெயிலை (22623/22624) தினசரி ரெயிலாக மாற்ற வேண்டும்.
பெங்களூரு இரவுநேர ரெயில்: கர்நாடகாவிலிருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் நலன் கருதி, வேளாங்கண்ணி-பெங்களூரு இடையே புதிய தினசரி இரவுநேர விரைவு ரெயிலைத் தொடங்க வேண்டும்.
வழிபாட்டு நேரங்களுக்கு முக்கியத்துவம்: வேளாங்கண்ணி ஆலயத்தில் நடைபெறும் முக்கிய வழிபாட்டு நேரங்களான காலை 9 (மலையாளம்), 10 (ஆங்கிலம்) மற்றும் நண்பகல் 12 (தமிழ்) ஆகிய நேரங்களைக் கருத்தில் கொண்டு ரெயில் கால அட்டவணையை வடிவமைக்க வேண்டும்.
ஏற்கனவே வேளாங்கண்ணி கிளை ரெயில் பாதை திட்டத்திற்குத் திருத்தல நிர்வாகம் நிதிப் பங்களிப்பு அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள சங்கம், சாலைப் பயணத்தில் முதியவர்களும் குழந்தைகளும் சந்திக்கும் சிரமங்களைக் குறைக்க ரெயில்வே நிர்வாகம் இந்த நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.