நதியா- பாலகிருஷ்ணன் 
தமிழக செய்திகள்

கன்னியாகுமரி: சொத்துத் தகராறில் கொழுந்தனைக் கொன்று பெண் தலைமறைவு

ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற அண்ணி நதியா, சமையலறையில் இருந்த சப்பாத்திக் கட்டையை எடுத்து தன் கொழுந்தனை சரமாரியாகத் தாக்கினார்

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் குடும்பத் தகராறு முற்றியதில், கொழுந்தனை சப்பாத்திக் கட்டையால் அடித்துக் கொலை செய்த அண்ணி தலைமறைவாகினார். இக்கொலைச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சொத்துத் தகராறு

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் வசித்து வருபவர் நதியா. அவருக்கும் அவரது கொழுந்தன் பாலகிருஷ்ணன் (வயது 66) என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களாகவே சொத்துத் தகராறு காரணமாக கடுமையான மோதல் நிலவி வந்தது. உறவினர்கள் சமாதானம் செய்தும் இருவருக்கும் இடையேயான சண்டை ஓயவில்லை.

சப்பாத்திக் கட்டையால் தாக்குதல்

வழக்கம் போல் இன்று (புதன்கிழமை) அதிகாலை நேரத்திலும் இருவருக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற அண்ணி நதியா, சமையலறையில் இருந்த சப்பாத்திக் கட்டையை எடுத்து தன் கொழுந்தனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த கொழுந்தன் ரத்த வெள்ளத்தில் சரிந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். கொழுந்தன் இறந்ததை உணர்ந்த நதியா, உடனடியாக வீட்டிலிருந்து தப்பியோடி தலைமறைவானார்.

தனிப்படை அமைத்து போலீஸ் தீவிர தேடுதல்

அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூரக் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அண்ணி நதியாவைப் பிடிப்பதற்காக மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.