தவெக நிர்வாகி கிறிஸ்டோபர் 
தமிழக செய்திகள்

கன்னியாகுமரி: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி கைது

கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுளார்.

காரில் லிப்ட் கொடுத்த தவெக நிர்வாகி

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையின் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய பொறுப்பாளர் கிறிஸ்டோபர். இந்த நிலையில் கடந்த 20-ம் தேதி அன்று குலசேகரம் பகுதியில் உள்ள கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக, மழையில் பேருந்திற்காக காத்திருந்த 2 மாணவிகளுக்கு கிறிஸ்டோபர் லிப்ட் கொடுத்துள்ளார்.

மாணவிக்கு பாலியல் தொல்லை

இதையடுத்து ஒரு மாணவியை அவரது வீட்டில் இறக்கிவிட்டு மற்றொரு மாணவியை காரில் அழைத்து சென்றுள்ளார். வழியில் காரை நிறுத்தி அந்த மாணவியிடம் அவர் பாலியல் கொடுமை செய்துளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தமிட்டு காரில் இருந்து குதிக்க முயன்றதால் அவரை நடுவழியில் இறக்கிவிட்டு தப்பியோடினார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் கடந்த 22-ம் தேதி அன்று தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தவெக நிர்வாகி கைது

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடுவதை அறிந்த கிறிஸ்டோபர், அண்டை மாநிலமான கேரளாவுக்கு தப்பிச்சென்று தலைமறைவானார். இதையடுத்து அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி நேற்று (வியாழக்கிழமை) அன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வைத்து கிறிஸ்டோபரைக் கைது செய்தனர்.

கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான கிறிஸ்டோபரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக நீக்கிவிட்டதாக தமிழக வெற்றிக் கழக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT