மாணிக்கம் தாகூர் 
தமிழக செய்திகள்

தமிழகத்தின் உயிர்நாடி திட்டத்தை முடக்க பார்க்கும் கர்நாடகா - மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் இதுபோன்ற உபரி நீர் இணைப்பு திட்டங்களை தங்கள் மாநில நலனுக்காக செயல்படுத்தியுள்ளன என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

சென்னை,

தமிழகத்தின் உயிர்நாடி திட்டத்தை முடக்க பார்க்கும் கர்நாடகா அரசு என்று மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மனு தாக்கல்

தமிழ்நாட்டின் உயிர்நாடியான காவிரி-வைகை-குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு தடை விதிக்க கோரியும், கட்டப்பட்ட முதற்கட்ட கட்டுமானங்களை இடிக்க கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு கூடுதல் மனு தாக்கல் செய்திருப்பது முற்றிலும் தேவையற்றது; இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான செயல்.

நியாயமற்றது

வெள்ள காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து வீணாக கடலில் கலக்கும் சுமார் 8.60 டி.எம்.சி உபரி நீரை மட்டுமே நமது மாநில எல்லைக்குள் திருப்பிவிடும் உள்மாநில திட்டத்தை முடக்க பார்ப்பது எந்த வகையிலும் நியாயமற்றது.

வாழ்வாதாரம் பாதிப்பு

கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையிலிருந்து தொடங்கி சுமார் 255.60 கிலோமீட்டர் தொலைவிற்கு கால்வாய் அமைத்து, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் எனது சொந்த தொகுதியான விருதுநகர் உள்ளிட்ட வறட்சி பாதித்த 7 மாவட்டங்களின் சுமார் 4 லட்சம் ஹெக்டேர் நிலங்களின் பாசன மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் மாபெரும் திட்டமிது. 2026-27 நிதிநிலை அறிக்கையிலும் ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில், இதற்கு தடை கோருவது தென் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் செயலாகும்.

நதிநீர் இணைப்பு திட்டம்

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் இதுபோன்ற உபரி நீர் இணைப்பு திட்டங்களை தங்கள் மாநில நலனுக்காக செயல்படுத்தியுள்ளன. ஆந்திர பிரதேசம் பட்டிசீமா திட்டத்தின் மூலம் கோதாவரி உபரி நீரை கிருஷ்ணா நதியுடன் இணைத்துள்ளது; தெலங்கானா அரசு காளேஸ்வரம் மற்றும் பாலமூரு-ரங்காரெட்டி திட்டங்களை முன்னெடுத்துள்ளது;அதேபோல மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் நதிநீர் இணைப்பு திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்தி வருகின்றன.

ஏற்புடையதல்ல

நாட்டின் பல மாநிலங்களும் வெள்ள உபரி நீரை பயன்படுத்தி விவசாயிகளை காக்கும்போது, தமிழ்நாடு தனது எல்லைக்குள் கடலில் கலக்கும் உபரி நீரை பயன்படுத்துவதை எதிர்ப்பது ஏற்புடையதல்ல. கர்நாடக அரசு இந்த தேவையற்ற சட்ட போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமாரை கேட்ட கொள்கிறேன்.

நடுநிலை

மத்திய அரசின் நீர்வளத் துறை மந்திரி சி.ஆர். பாட்டீல் நடுநிலையோடு செயல்பட்டு தமிழ்நாட்டின் நியாயமான நீர் உரிமையை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT