சென்னை,
கர்நாடகம் தண்ணீர் வழங்க வாய்ப்பில்லை: சம்பா சாகுபடிக்கு முழுமையாக நீர் வழங்க முடியுமா? அரசு தெளிவுபடுத்த வேண்டும்! என்று அன்புமணி தெரிவித்தார். இது தொடர்பாக,பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;-
கர்நாடக அணைகளில் தொடங்கி, கல்லணை வரை காவிரி நீர் தொடர்பாக வரும் செய்திகள் எதுவுமே நம்பிக்கையளிப்பதாக இல்லை. கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வருவதற்கும், கல்லணையில் திறக்கப்படும் நீர் கடைமடை பாசனப் பகுதிகளை சென்றடைவதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில், காவிரி டெல்டா விவசாயிகள் சம்பா சாகுபடியை தொடங்கலாமா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை நெற்பயிர்களை காப்பாற்றவும், சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கு உழவர்கள் தயாராகவும் வசதியாக மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஒன்றாம் தேதி முதல் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. காவிரி நீர் கல்லணையை நேற்று வந்தடைந்த நிலையில், இன்று முதல் அங்கிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூரிலிருந்து வினாடிக்கு 7000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், கல்லணைக்கு சராசரியாக வினாடிக்கு 2500 கனஅடி நீர் மட்டுமே வருகிறது. இதை கொண்டு கல்லணையிலிருந்து காவிரி மற்றும் அதன் கிளை நதிகளில் எவ்வளவு கன அடி நீர் திறந்து விடப்படும் என்பது தெரியவில்லை.
மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர் திறந்தால் மட்டுமே, அது காவிரியின் மட்டத்தை விட சற்று அதிக உயரத்தில் இருக்கும் பாசன கால்வாய்கள் வழியாக வயல்களுக்கு செல்லும். பாசன கால்வாய்களுக்கு சென்றது போக கடைமடை பாசன பகுதிகள் வரை தண்ணீர் சென்றடைய அந்த அளவுக்கு தண்ணீர் திறக்க வேண்டியது அவசியமாகும். ஆனால், அதில் பாதிக்கும் குறைவான நீரே திறக்கப்படுவதால் பாசன கால்வாய்களில் தண்ணீர் செல்ல வாய்ப்பில்லை. கடைமடை பாசன பகுதிகளுக்கு சென்றடைவதற்கும் மேட்டூர் அணையிலிருந்து இப்போது திறக்கப்பட்டிருக்கும் தண்ணீர் போதுமானதல்ல.
அதே நேரத்தில், மேட்டூர் அணையில் மேட்டூர் அணையில் 92.50 அடி, அதாவது 55.50 டி.எம்.சி மட்டுமே தண்ணீர் இருக்கும் நிலையில், வினாடிக்கு 16,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டால், அதை கொண்டு ஒரு மாதத்திற்கு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும். அதற்குள் சம்பா பருவத்திற்கான விதைப்பு பணிகள் கூட நிறைவடைந்திருக்காது. தாளடி பருவத்திற்கான சாகுபடிகள் தொடங்கப்பட்டிருக்காது. ஒரு மாதத்திற்குள் மேட்டூர் அணையில் உள்ள நீர் திறக்கப்பட்டு விட்டால், ஒரு மாதத்திற்கு பிறகு பாசனத்திற்கு நீர் இருக்காது. அப்போது சம்பா பருவ நெற்பயிர்களை காப்பாற்ற முடியாத அவலநிலை ஏற்பட்டு விடும்.
இந்த நிலையை தவிர்க்க வேண்டும் என்றால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் வழங்க வேண்டிய நீரை, பாக்கியின்றி பெற்றால் தான் சாத்தியமாகும். ஜூன் மாதம் முதல் செப்டம்பர் 5-ம் தேதி வரை 92.31 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டிய நிலையில், 31.60 டி.எம்.சி நீரை மட்டுமே காவிரியில் தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் வழங்கியுள்ளது. கர்நாடக அரசு நேற்று வரை 61 டி.எம்.சி நீர் வழங்க வேண்டியுள்ளது. இந்த நீர் கிடைத்தால் சம்பா & தாளடி பயிர்களை வெற்றிகரமாக சாகுபடி செய்து விட முடியும். ஆனால், அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதையே கர்நாடக அணைகளின் நீர் இருப்பும், மழை கணிப்பும் காட்டுகின்றன.
கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய 4 அணைகளிலும் சேர்த்து இன்றைய நிலவரப்படி 74 டி.எம்.சி நீர் மட்டுமே உள்ளது. அதிலிருந்து அதிகபட்சமாக 51 டி.எம்.சி நீரை மட்டுமே திறக்க முடியும். ஆனால், காவிரியில் நேரடியாக தண்ணீர் திறக்கப்படும் கபினி அணையிலிருந்து இன்னும் சுமார் 1 டி.எம்.சி நீரையும், கிருஷ்ண ராஜ சாகர் அணையிலிருந்து 20 டி.எம்.சியையும் மட்டுமே வழங்க முடியும். 4 அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 5753 கன அடி மட்டுமே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கபினி அணையிலிருந்து நீர் திறக்கப்படுவது அடுத்த ஓரிரு நாள்களில் நிறுத்தப்படும். கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் பெரும்பகுதி கர்நாடக விவசாயிகளால் பயன்படுத்தப்படுவதால் அந்த நீரும் முழுமையாக கிடைக்காது.
இத்தகைய சூழலில் சம்பா மற்றும் தாளடி சாகுபடிகளை தொடங்கலாமா, வேண்டாமா? என்ற ஐயமும், எதிர்பார்த்தவாறு தண்ணீர் கிடைக்காத நிலையில் பயிர்கள் என்னவாகும்? என்ற கவலையும் உழவர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இந்த ஐயத்தையும், கவலையையும் போக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.
சம்பா மற்றும் தாளடி பருவத்தில் விதைப்பு, அடியுரமிடுதல், நடவு, மேல் உரமிடுதல் ஆகியவற்றுக்காக மட்டும் முதல் 45 நாள்களில் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செயலாகும். இந்த அளவுக்கு செலவு செய்து வளர்த்தெடுத்த பயிர்களை தண்ணீர் இல்லாமல் காப்பாற்ற முடியாமல் போனால், அதனால் ஏற்படும் பயிர் இழப்பையும், பொருளாதார இழப்பையும் உழவர்களால் தாங்கி கொள்ள முடியாது. ஏற்கனவே, குறுவை சாகுபடி பொய்த்து போனதால் காவிரி பாசன மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், இன்னொரு இழப்பை அவர்களால் தாங்கி கொள்ள முடியாது; அதற்கு அவர்கள் தயாராகவும் இல்லை.
எனவே, சம்பா மற்றும் தாளடி பருவம் முடியும் வரை தடையின்றி காவிரியில் தண்ணீர் வழங்குவதற்கு ஏதேனும் திட்டம் உள்ளதா? அதை நம்பி காவிரி பாசன மாவட்டங்களின் விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ளலாமா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.