தர்மபுரி,
கர்நாடக ரசாயன கழிவுகளால் மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதி பச்சை நிறமாக மாறி காட்சி அளிக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே நாகமரை, ஒட்டனூர், செல்லமுடி, பூச்சூர், சித்திரபட்டி, கவுண்டனூர் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் காவிரி கரையோரத்தில் மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியாக உள்ளன.
இந்த கிராம மக்கள் மீன்பிடி தொழில், சிறு, குறு விவசாயம் செய்து வருகிறார்கள். மேலும் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காகவும், இந்த மேட்டூர் நீர்த்தேக்கத்தை நம்பியே வாழ்கின்றனர். இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்த்தேக்க காவிரி கரையோரங்களில் உள்ள நீரானது பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுகிறது.
இதன் காரணமாக இந்த நீரை விவசாயத்திற்கு மட்டுமல்லாமல் குடிநீருக்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் காவிரி கரையோர பகுதி முழுவதும் இந்த ரசாயன கழிவுகளால் சுகாதார கேடு அடைந்துள்ளது. காவிரி கரையோர கிராமங்களில் ஆங்காங்கே தற்போது வைரஸ் காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது.
மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீர் பச்சை நிறமாக மாறி காட்சி அளிப்பது ஏன்? என்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அதாவது, கர்நாடக பகுதிகளில் இருந்து ரசாயன கழிவுகளை காவிரி ஆற்றில் கலந்து விடுவதால் காவிரி நீர் அசுத்தம் அடைந்து பச்சை நிறமாக மாறி காட்சி அளிக்கிறது.
மழை வெள்ளம் அதிகமாக வரும்போது காவிரி ஆற்றில் பாய்ந்து வரும் தண்ணீரில் ரசாயன கழிவுகளும் சேர்ந்து ஆற்றில் அடித்து செல்லப்படும். அந்த தண்ணீர் ஒகேனக்கல்லை கடந்து வேகமாக வரும்போது, அதில் ரசாயனம் கலந்திருப்பது பெரிதாக தெரிவது இல்லை. அதே நேரத்தில் மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் அந்த தண்ணீர் தற்போது தேக்கம் அடைந்து நிற்கும்போது ரசாயன கழிவுகள் அப்படியே தண்ணீரில் கலந்து விடுகிறது. இதனால்தான் கரையோர பகுதிகளில் காவிரிஆறு பச்சை நிறமாக மாறி உள்ளது.
இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கரையோர கிராம மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
ஏற்கனவே காவிரியில் தண்ணீர் தர கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், இந்த ரசாயன கழிவுகளால் காவிரி பாசன விவசாயிகளும், காவிரி குடிநீரை நம்பி இருக்கும் மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே இதுகுறித்து தமிழக அதிகாரிகள், கர்நாடக அரசிடம் பேசி தமிழ்நாட்டின் உயிர்நாடியான காவிரியில் ரசாயன கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
மேட்டுர் அணை நீர்த்தேக்க பகுதியில் பச்சை நிறமாக தண்ணீர் மாறி உள்ளது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது. 'அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் தண்ணீர் வரத்து தற்போது வினாடிக்கு சுமார் 5 ஆயிரம் கனஅடியாக தான் உள்ளது. ஏரியூர் அருகே நாகமரை சுற்றுவட்டாரத்தில் உள்ள அணையின் நீர்த்தேக்க பகுதிகளை நாங்கள் பார்வையிட உள்ளோம். அங்கு தண்ணீர் பச்சை நிறமாக மாறி இருந்தால் அது குறித்து விசாரித்து எதனால் இந்த தண்ணீர் நிறம் மாறி உள்ளது என கண்டறிந்து அரசுக்கு முறைப்படி தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள்.