தமிழக செய்திகள்

தாளவாடி அருகே சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் மீது தாக்குதல்: கர்நாடக சூதாட்ட கும்பல் அட்டூழியம்

தாளவாடி அருகே கும்பல் கும்பலாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கொங்கள்ளியில் பிரசித்தி பெற்ற மல்லிகார் ஜுன சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதேபோல் கார்த்திகை மாதம் முழுவதும் விஷேச பூஜைகள் நடக்கும். இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

குறிப்பாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வந்து மலையடிவார பகுதியில் தங்கியிருந்து சாமி தரிசனம் செய்வார்கள். அவ்வாறு மலையடிவாரத்தில் தங்குபவர்கள் கும்பல், கும்பலாக பணம் வைத்து சூதாடுவதாக தாளவாடி போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இன்று (செவ்வாய்க்கிழமை) கார்த்திகை தீபத்திருநாளை யொட்டி கோவிலில் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில் கலந்துகொள்வதற்காக கர்நாடகாவை சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் இரவு மலையடிவாரத்தில் தங்கி கும்பல், கும்பலாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தாளவாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசு, போலீஸ்காரர்கள் மார்ட்டின், ரமேஷ் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சூதாடிக் கொண்டு இருந்த கர்நாடகாவை சேர்ந்தவர்களை போலீசார் எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சூதாட்ட கும்பல் ஒன்று சேர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாரை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியது.

பின்னர் அங்கிருந்து அந்த கும்பல் தப்பி ஓடி விட்டது. தாக்குதலில் 3 போலீசாரும் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாளவாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த 3 போலீசாரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் தாளவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் போலீசாரை தாக்கிய கர்நாடக சூதாட்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT