சென்னை,
கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்-அமைச்சர் விஜய் விஜய் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனூர் தாலுக்காவில் உள்ள கிராமங்களில் வசித்து வந்த தமிழர்களான அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர், 2026 ஆகஸ்ட் 15 அன்று அதிகாலையில், காவிரி வனவிலங்கு சரணாலய பகுதியில், கர்நாடக வன துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது. இந்த படுகொலையை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த சம்பவம் தொடர்பாகக் கர்நாடக வனத்துறை கொடுத்த விளக்கம் ஏற்புடையதல்ல.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும். உயர்மட்ட விசாரணை குழு அமைத்து, தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு வழங்க வேண்டும்.
இதுபோன்று இனியொரு சம்பவம் நடக்காமல் இருக்க, கர்நாடக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.