திருவண்ணாமலை,
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 24-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் உலகப்புகழ்பெற்ற வழிபாட்டு தலமான அண்ணாமலையார் கோவில் உள்ளது. பிரம்மனும், திருமாலும் அடிமுடி காணாத ஜோதிப்பிழம்பாக சிவபெருமான் எழுந்தருளியதை கொண்டாடும் வகையில் காத்திகை மாதம் கிருத்திகை தினத்தன்று திருவண்ணாமலை மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவின் சிகர நிகழ்வாக வருகிற 24-ந்தேதி மாலை திருவண்ணாமலை மலையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
இந்த நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகிற 24-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் டிசம்பர் 5-ந்தேதி (சனிக்கிழமை) பணி நாளாக செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.