சென்னை,
இன்று கரூர் நாடாளுமன்ற தொகுதியின் போக்குவரத்து உள்கட்டமைப்பு, விளையாட்டு மேம்பாடு, பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான முக்கிய கோரிக்கைகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யிடம் வழங்கினேன். இது தொடர்பாக, கருரில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
கரூர் நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுமக்கள் மற்றும் சரக்கு வாகனங்களின் பயணத்தை எளிதாக்கவும் ரூ.72.83 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரூர் சுற்றுவட்டச் சாலை திட்டத்தின் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க தேவையான நிதி ஒதுக்கீடு செய்தல்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜூடோ விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்குப் போதிய பயிற்சி வசதிகள் இல்லாத நிலையில், கரூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் 40 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம் மற்றும் 10 மீட்டர் உயரம் கொண்ட நவீன ஜூடோ உள்விளையாட்டு அரங்கம் அமைத்தல். மேலும், விராலிமலையில் 40 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம் மற்றும் 10 மீட்டர் உயரம் கொண்ட நவீன உள்விளையாட்டு அரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தல்.
கரூர் மாநகரில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில், நடைபயிற்சிப் பாதைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள், பசுமையான திறந்தவெளிப் பகுதிகள் மற்றும் பாதுகாப்பான பொழுதுபோக்கு வசதிகளுடன் உலகத் தரம் வாய்ந்த பொதுப் பூங்கா அமைத்தல்.
கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான வாங்கல் சாலையில் உள்ள குப்பைக் கிடங்கில் பல ஆண்டுகளாக தேங்கியுள்ள சுமார் 40,000 மெட்ரிக் டன் குப்பைகளையும் உயிரி அகழ்வு (Bio Mining) முறையில் அகற்றி, அப்பகுதி மக்களின் சுகாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாத்தல். மேலும், எதிர்காலத்தில் குப்பைகள் தேங்குவதை தவிர்க்க அறிவியல் முறையிலான திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்துதல்.
பொதுமக்களின் நீண்டகால தேவைகளையும், இளைஞர்களின் எதிர்காலத்தையும், கரூர் மாநகரின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, இக்கோரிக்கைகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து செயல்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.