தமிழக செய்திகள்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும் செந்தில் பாலாஜி

வருகிற 17-ந்தேதி சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை,

கரூரில் கடந்த் ஆண்டு செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் கடந்த 12-ம் தேதி ஆஜரானார். அப்போது அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப் பட்டது.

தொடர்ந்து, விஜய் இன்று (மார்ச் 10) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் விஜய் தரப்பில் ஆஜராக கூடுதல் அவகாசம் கோரப்பட்டுள்ளது. இதற்கிடையே, கரூர் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதாக நேற்று தகவல் வெளியானது. ஆனால் இது தொடர்பாக நேற்று அவர் எந்த விளக்கும் அளிக்காத நிலையில், வருகிற 17-ந்தேதி சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

"கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்கு பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.