கருர்,
கருரில் கூடுதல் சமூகநீதி மாணவர் விடுதிகளை அமைத்து தருமாறு ஜோதிமணி கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
சமூகநீதித்துறை அமைச்சர் வன்னியரசை சந்தித்து, இரண்டு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்தேன்.
முதலாவதாக, கரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 5,000 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, குறிப்பாக ஏழை மற்றும் எளிய குடும்பங்களை சேர்ந்த தலித் மாணவ,மாணவியர் இக்கல்லூரியில் கல்வி பயில்கின்றனர்.
ஆனால், அவர்களுக்கு போதுமான அளவில் சமூகநீதி மாணவர் விடுதிகள் இல்லாததால் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே, மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக கூடுதல் சமூகநீதி மாணவர் விடுதிகளை அமைத்து தருமாறு கோரிக்கை வைத்தேன்.
இரண்டாவதாக, வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேடசந்தூர், குஜிலியம்பாறை மற்றும் வடமதுரை பகுதிகளில் உள்ள சமூகநீதி பள்ளி மாணவியர் விடுதிகள் பழுதடைந்து இடிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய விடுதி கட்டிடங்களை அமைத்துத் தருமாறும் கோரிக்கை வைத்தேன். இந்த இரண்டு கோரிக்கைகளையும் உடனடியாக கனிவுடன் பரிசீலித்து, இந்த நிதியாண்டிலேயே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
தோழர் வன்னியரசு எனக்கு நீண்டகால நண்பர். சமூகநீதி மற்றும் கொள்கை அரசியலின் அடிப்படையில் நீண்டகாலம் இணைந்து பயணித்திருக்கிறோம். தேர்தலில் அவர் வெற்றி வாய்ப்பை இழந்த நேரங்களில் மிகுந்த வருத்தமாக இருக்கும்.இப்பொழுது அவரை அமைச்சராக சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியளித்தது.
அமைச்சரின் அலுவலகத்தில் ஏராளமான பொதுமக்கள், குறிப்பாக ஏழை, எளிய மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள், எந்த முன்பதிவும் இல்லாமல் வந்து தங்கள் கோரிக்கைகளை நேரடியாக அளித்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். கட்டுக்கடங்காத கூட்டம். ஒவ்வொருவரையும் பொறுமையாகக் கேட்டறிந்து, எளிமையாக அணுகி மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர் மக்கள் நல அணுகுமுறை மிகவும் பாராட்டத்தக்கது.
எளிமையுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு வரும் சமூகநீதி துறை அமைச்சர் தோழர் வன்னியரசுக்கு எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.மிகவும் ருசியான மாம்பழ உபசரிப்பிற்கு ஒரு சிறப்பு நன்றி தோழர் !
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.