கரூர்,
கரூர் மாவட்டம் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் சாலை சீரமைப்புப் பணிகள் கிடப்பில் போடப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில் மேட்டுத் தெரு பகுதியில், கடந்த பல மாதங்களாக சாலை சீரமைப்புப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. வளர்ச்சிப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் சீரமைக்கப்படாததால், அப்பகுதி முழுவதும் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தினந்தோறும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வெயில் காலங்களில் புழுதிப் படலமும், மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக சாலை மாறுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் ஒன்றுதிரண்டு, இன்று (வியாழக்கிழமை) கரூர் ஆண்டாங்கோவில் கீழ்பாகம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில் மேட்டுத் தெரு பகுதியின் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை சீரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.