தமிழக செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசு பணி ரத்து!

அரசு பணி வழங்கிய அரசாணையை ரத்து செய்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை,

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கிய அரசாணையை ரத்து செய்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

31 பேருக்கு அரசு வேலை

கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகி இருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த சம்பவத்தில் பலியான 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கி முதல்-அமைச்சர் விஜய் உத்தரவுகளை நேரில் வழங்கி இருந்தார்.

பொதுநல வழக்கு தாக்கல்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சூளையைச் சேர்ந்த வழக்கறிஞர் என்.பிரபாகரன், நாம் தமிழகர் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கிளிட்டஸ் மற்றும் அரசு வேலைக்கு படித்து வரும் ஒருவர் என 3 பேர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஏற்கனவே அரசு 10 லட்சம் ரூபாயும், த.வெ.க. சார்பில் 20 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விசாரணையில் தலையீடு

கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், அரசியல் கூட்டங்களில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வழக்கு புலன் விசாரணையில் உள்ள போது பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்குவது விசாரணையில் தலையிடுவதைப் போல உள்ளதாகவும், இது சாட்சியத்தை மாற்றிக் கொடுக்க நிர்பந்திக்கும் வகையில் உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாணை ரத்து

இந்த நிலையில் கரூரில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை வழங்கியதற்கான வழக்கு விசாரணை ஐகோர்ட்டு மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கிய அரசாணையை ரத்து செய்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிபதிகள் கேள்வி

மேலும் "கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கி ஏன் சுய தொழில் முனைவராக மாற்றக்கூடாது?

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பணிவாய்ப்பு வழங்கியதால், சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சாலை விபத்தில் அரசு பேருந்து மோதி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கப்படுமா?" என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.