சென்னை,
முரசு புயலில் சிக்கி உயிரிழந்த காசிமேடு மீனவர்களின் குடும்பத்தினருக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து அக்டோபர் 29-ம் தேதி செல்வழகன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், படகு ஓட்டுநர் சூர்யா உள்ளிட்ட 9 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அந்தப் படகில், காசிமேட்டைச் சேர்ந்த படகு ஓட்டுநர் சூர்யா (வயது 49), குப்பன்(48), மோகன்(47), ராஜேஷ்(52), முருகன்(48), குப்புசாமி(58), விஜயகாந்த்(44), அரவிந்த்(40), கடலூரைச் சேர்ந்த நாராயணன்(57) ஆகியோர் சென்றனர்.
சென்னை கடல் பகுதியில் இருந்து புறப்பட்ட மீனவர்கள், ஆந்திர மாநில கடல் பகுதிக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த அக்டோபர் 31-ம் தேதி ஆந்திர மாநிலம் அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, வானிலை ஆய்வு மையம் முரசு புயல் தொடர்பான எச்சரிக்கை விடுத்திருந்தது.
மேலும் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வழங்கிய புயல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கையைத் தொடர்ந்து, ஆந்திர மாநிலம், நிஜாம்பட்டினம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, புயல் எச்சரிக்கை காரணமாக விசைப்படகை பாதுகாப்பாக ராமயபட்டினம் கடற்கரையில் நிறுத்தி உள்ளனர்.
தொடர்ந்து, மீண்டும் மீன்பிடிக்க சென்ற போது நடுக்கடலில் விசைப்படகின் என்ஜின் பழுதடைந்துள்ளது. இதுகுறித்து நவம்பர் 3-ம் தேதி அதிகாலை 3:30 மணி அளவில் அருகிலிருந்த மற்றொரு விசைப்படகிற்கு வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு 9 மீனவர்களையும் தொடர்பு கொள்ள முடியாமல் போனது.
இந்த நிலையில், மாயமான மீனவர்களை கப்பல் மூலமாகவும் விமானம் மூலமாகவும் தேடும் பணி நடைபெற்று வருவதாக தமிழ்நாடு மீன்வளத் துறை தெரிவித்தது. “காணாமல் போன விசைப்படகு மற்றும் அதிலுள்ள 9 மீனவர்கள் குறித்த விவரங்களை ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளில் உள்ள உள்ளூர் மீனவர்கள், மீனவர் சங்கங்கள் மற்றும் விசைப்படகு உரிமையாளர்களுக்கு தெரியப்படுத்தவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் ஏதுவாக, தொடர்புடைய அலுவலர்களுக்கு தெரிவிக்க நெல்லூர், ஓங்கோல் மற்றும் விசாகப்பட்டினம் இணை இயக்குநர்களிடம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியக் கடலோரக் காவல்படையின் நிஜாம்பட்டினம் பகுதி கமாண்டன்ட்டிடம் இருந்து தொலைபேசி வாயிலாகப் பெறப்பட்ட தகவலின்படி, தேடுதல் பணிக்காக இரண்டு ஹோவர்கிராஃப்ட் (Hovercraft), ஒரு விரைவுப் ரோந்துக் கப்பல் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், சென்னை தளத்தில் இருந்து சிறப்புத் தேடுதல் விமானம் அனுப்பப்பட்டு வான்வழித் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிருஷ்ணாப்பட்டினத்தில் இருந்து ஆழ்கடல் கப்பல் அனுப்பப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது“ என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பிரகாசம் மாவட்டம், கோதாபட்டினம் கடற்கரையில் கரை ஒதுங்கிய நான்கு உடல்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களுடையவை என்பதை மாவட்ட ஆட்சியர் ராஜா பாபு உறுதிப்படுத்திய தகவல்கள் வந்தன.
“தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த தகவலின்படி, சென்னையில் இருந்து நான்கு குழுக்கள் வெவ்வேறு படகுகளில் மீன்பிடிக்கச் சென்றன. கடலில் புயலின் தீவிரம் அதிகரித்த போது, மூன்று குழுக்கள் பாதுகாப்பாக நெல்லூர் மாவட்டத்தின் ராமயபட்டினம் கடற்கரையில் தங்கள் படகுகளை நிறுத்தின. அப்போது ஆபத்தான நிலையில் இருந்த நான்காவது குழு, பாபட்லா கடற்கரையிலும் நிஜாம்பட்டினம் கடற்கரையில் தஞ்சம் புகுந்தது.
இந்த நிலையில் நிஜாம்பட்டினத்தில் இருந்த மீனவர்கள், ராமயபட்டினத்தில் உள்ள தங்கள் சக மீனவர்களுடன் இணைய விரும்பினர். அப்போது 'முரசு' (Murasu) புயல் வீசிக் கொண்டிருந்த வேளையில், யாரிடமும் தெரிவிக்காமல் மீனவர்கள் ராமயபட்டினத்தை நோக்கிப் புறப்பட்டுள்ளனர். அந்த நேரத்தில் கடல் கொந்தளிப்பாக இருந்ததாலும், பலத்த காற்று வீசியதாலும் அவர்களின் படகு கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.
அந்த விபத்து நடந்த போது, அந்தப் படகில் மொத்தம் 9 மீனவர்கள் இருந்ததை தமிழ்நாடு மீன்வளத்துறை முதற்கட்டமாக உறுதிப்படுத்தியுள்ளது. அவர்களில் நான்கு பேரின் உடல்கள் கோதாபட்டினம் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளன. மீதமுள்ள ஐந்து பேரின் நிலை என்னவென்று இன்னும் தெரியவில்லை. அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. கடலில் மூழ்கிய படகை மீட்க உள்ளூர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” என்று ஆந்திர மாநிலம்,பிரகாசம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருக்கிறார்.
இதனிடையே, ஆந்திராவில் ஓங்கோல் கடற்பகுதியில், ஐந்து பேர் உடல் கரை ஒதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, மீன்வளத்துறை உதவி இயக்குநர் மற்றும் மாயமான மீனவர்களின் உறவினர்கள் அடங்கிய குழுவினருடன், தமிழ்நாடு நிதியமைச்சர் மரியவில்சனும் ஆந்திராவிற்கு விரைந்துள்ளார்.
கண்ணுக்கெட்டிய வரை பரந்து விரிந்த கடலுக்குள் புகும் துணிச்சல், தன்னம்பிக்கை, சமயோசிதமான முடிவு, அலையின் வீச்சையும் காற்றின் போக்கையும் கணித்து எதிர்கொள்ளும் உடல்வலு ஆகியவற்றினால் கடலுக்குள் செல்லும் ஒவ்வொரு மீனவரும் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும்.
மீனவர்களின் கடல்சார் மரபறிவையும் சர்வதேச நவீன அறிவியல் தொழில்நுட்பங்களையும் தகவல் தொடர்புச் சாதனங்களையும் இணைத்து பேரிடர்களை முன்கூட்டியே கணிப்பது, முற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, தவிர்க்க முடியாமல் சிக்கிக் கொள்வோரை துரிதமாக மீட்பது, மீண்டும் தொழிலுக்குத் திரும்பும்வரை அவர்கள் சுயமரியாதையுடன் வாழ்வதற்கான நிவாரணத் திட்டங்களை வகுத்து செயல்படுத்துவது என மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் இணைந்து செயல்படுவது அவசியம் ஆகும்.
உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு 7 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. முரசு புயலில் சிக்கி உயிரிழந்த காசிமேடு மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காணாமல் போன மற்ற மீனவர்களையும் கண்டுபிடிக்க மீன்வளத்துறை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.