தமிழக செய்திகள்

சுற்றுலா பயணிகள் வருகையின்றி களையிழந்த காட்டேரி பூங்கா

2-வது சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பூங்கா தயார்படுத்தப்பட்டது.

வெலிங்டன்,

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து தடைப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் இன்றி காட்டேரி பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது.

மண் சரிவு

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 23-ந் தேதி பெய்த கனமழை காரணமாக, குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. பாறைகள், மரங்கள் விழுந்தன. இதனால் சாலை சேதமடைந்தது. இதையடுத்து குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளன.

தற்போது மலைப்பாதையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோரம் உள்ள கோழிக்கரை, குரும்பாடி, புதுக்காடு, வடுகன்தோட்டம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து குன்னூரில் இருந்து பர்லியார் வரை அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. உள்ளூர் மக்கள் மட்டும் சென்று வர தினமும் 3 முறை அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

காட்டேரி பூங்கா

இருப்பினும், பிற வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காட்டேரி பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அடியோடு குறைந்து உள்ளது. 2-வது சீசனையொட்டி பூங்காவில் பல்வேறு வகைகளை சேர்ந்த மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. அந்த செடிகளில் தற்போது பல வண்ணங்களில் மலர்கள் பூத்துக்குலுங்குகிறது.

விடுமுறை நாளான நேற்று இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமான காட்டேரி பூங்கா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 2-வது சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பூங்கா தயார்படுத்தப்பட்டது. ஆனால், மலர்களை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் வராத நிலையே உள்ளது. குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து தடைபட்டு உள்ளதால், பரபரப்பாக காணப்படும் இந்த சாலை வாகனங்கள் இன்றி வெறிச்சோடி உள்ளது. இதனால் காட்டு யானை, கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் சாலையில் நடமாடி வருகின்றன என்று பழங்குடியின மக்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT