தமிழக செய்திகள்

எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவிய கே.சி.வீரமணி

சட்டமன்ற தேர்தலில் அதிமுக குறைந்த இடங்களிலேயே வெற்றி பெற்றது.

சென்னை,

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வி கண்டதையடுத்து, கட்சிக்குள் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது. சட்டசபை தேர்தல் தோல்வியால், அ.தி.மு.க.வில் பெரும் பூகம்பமே வெடித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தனி அணியாக செயல்படத் தொடங்கியுள்ளனர்.

இந்த அணியினர் சட்டசபையின் அதிமுக குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணியை தேர்வு செய்தனர். அதே நேரத்தில், பழனிசாமி தரப்பினரும் அவரையே சட்டப்பேரவை குழுத் தலைவராக அறிவித்து, அதற்கான கடிதத்தை தற்காலிக சபாநாயகராக இருந்த கருப்பையாவிடம் வழங்கினர்.

இதற்கிடையில், தமிழக அரசுக்கு எதிராக நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சண்முகம் அணியினர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் கடும் அதிருப்தியடைந்த பழனிசாமி, தனக்கு எதிராக செயல்பட்ட வேலுமணி, சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் மாவட்ட செயலாளர் பொறுப்புகளை நீக்கி நடவடிக்கை எடுத்தார்.

இதனிடையே கட்சியை ஒன்றிணைக்கும் பொருட்டு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைத்தால் நாங்கள் பேசத் தயார் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.

சென்னை எம்.ஆர்.சி. நகர் அலுவலகத்தில் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதுஒருபுறம் இருக்க, இபிஎஸ் தரப்பினர், தமிழ்நாடு பொறுப்பு கவர்னர் அர்லேக்கரை விரைவில் சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேரள முதல்-மந்திரி பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்ற கவர்னர் அர்லேக்கர் தமிழ்நாட்டுக்கு திரும்பிய பின் சந்திக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவர்னர் மாளிகையில் இபிஎஸ் தரப்பு நேற்று புகார் அளித்து இருந்தது.

இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக இருந்த கே.சி.வீரமணி, எடப்பாடி |பழனிசாமி தரப்புக்கு திடீர் ஆதரவு தெரிவித்துள்ளார். நேற்று வரை எஸ்.பி.வேலுமணியுடன் இருந்தேன், இன்று எனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேன் என கே.சி.வீரமணி கூறியுள்ளார். கே.சி.வீரமணியை தொடர்ந்து மேலும் பல எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தர முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மார்கெட் பகுதியில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி புகைப்படங்களை துடைப்பம், செருப்பால் அடித்து, சாணத்தை கரைத்து ஊற்றி அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக தொண்டர்கள் ஈடுபட்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.