தமிழக செய்திகள்

தாய், மகனை தாக்கி கொலை மிரட்டல்: கேரள சிப்ஸ் நிறுவன உரிமையாளர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரியைச் சேர்ந்த ஒரு தம்பதியின் மகன் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான கேரளாவில் உள்ள சிப்ஸ் நிறுவனத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரியில் நிலுவை சம்பள பணத்தை திருப்பித் தருமாறு கூறி தாய் மற்றும் மகனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த கேரள சிப்ஸ் நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

கேரளாவில் உள்ள சிப்ஸ் நிறுவனத்தில் வேலை

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி ராஜமணியபுரத்தைச் சேர்ந்த ஜெயநாதன்- மோகனா (வயது 43) தம்பதியின் மகன் பாலமுருகன், ஆறுமுகனேரி காணியாளர் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கு சொந்தமாகக் கேரளாவில் இயங்கி வரும் சிப்ஸ் நிறுவனத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

சம்பள பிரச்சினை

மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் பேசப்பட்ட நிலையில், அங்கு வேலை கடினமாக இருந்ததால் பாலமுருகன் 40 நாட்கள் மட்டும் பணியாற்றிவிட்டு ரூ.19 ஆயிரம் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு ஊருக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில் சிப்ஸ் நிறுவன உரிமையாளர் கருப்பசாமி, மோகனாவின் வீட்டிற்குச் சென்று, "பாலமுருகன் செய்த வேலைக்கு ரூ.12 ஆயிரம் மட்டுமே தர முடியும்; மீதி ரூ.7 ஆயிரத்தை திருப்பிக் கொடு" எனக் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு அவர்கள் பணம் தர மறுத்துவிட்டனர்.

தாய், மகனை தாக்கி கொலை மிரட்டல்

இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை, கருப்பசாமி தனது தாய் இசக்கியம்மாளுடன் மீண்டும் மோகனாவின் வீட்டிற்குச் சென்று பாலமுருகனின் கைபேசியை பறித்துக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றவே, அங்கிருந்த அலுமினிய வாளியால் மோகனா மற்றும் பாலமுருகனை தாக்கி, இரவுக்குள் பணம் தரவில்லையெனில் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார்.

சிப்ஸ் நிறுவன உரிமையாளர் கைது

இந்த தாக்குதலில் காயமடைந்த மோகனா மற்றும் பாலமுருகன் ஆகிய 2 பேரும் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து மோகனா அளித்த புகாரின் பேரில், ஆறுமுகனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.