புதுடெல்லி,
கேரளத்தின் மிக உயரமான யானையாக, ராமன் என்ற யானை உள்ளது. இந்த யானையின் உரிமை மற்றும் பாதுகாப்புத் தொடர்பாக நீண்ட காலமாக ஒரு சட்டப் போராட்டம் நடந்து வருகிறது.
ஜெயகிருஷ்ணமேனன் என்பவர். இந்த யானை மாதா அமிர்தானந்தமயி மடத்திற்கு சொந்தமானது என்றும், பராமரிப்புக்காக மட்டுமே கிருஷ்ணன்குட்டி என்பவரிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது என்றும் வாதிட்டார். ஆனால், கிருஷ்ணன்குட்டி என்பவர் கடந்த 2017-ல் எழுதப்பட்ட தானப்பத்திரம் மூலம் யானை தனக்கே சொந்தம் என்று உரிமை கோரினார். இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்டு 6-ந் தேதி ஒரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.
அதன்படி, வழக்கு முடியும் வரை யானையை எந்தவொரு கோவில் திருவிழாக்களுக்கோ அல்லது வணிக ரீதியிலான பணிகளுக்கோ பயன்படுத்தக்கூடாது என்று கூறியது. அதனை ஏற்று கிருஷ்ணன்குட்டி தரப்பில் உறுதிமொழியும் அளிக்கப்பட்டது.
அதற்கிடையில் கோர்ட்டு உத்தரவின்படி ராமன் யானையின் உடல்நிலையைப் பரிசோதிக்கச் சென்ற வனத்துறையினர், அந்த யானை, சாவக்காடு என்ற இடத்தில் உள்ள ஒரு கோவில் திருவிழா ஊர்வலத்தில் பங்கேற்றதைக் கண்டுபிடித்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதற்கு பதிலளித்த கிருஷ்ணன்குட்டி, “திருவிழாவில் பங்கேற்க வேண்டிய மற்றொரு யானைக்கு உடல்நிலை சரியில்லாததால், பக்தர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஒருமுறை மட்டுமே ராமன் யானை அங்கு அழைத்துச் செல்லப்பட்டது. வணிக நோக்கம் எதுவும் இல்லை” என்று கூறி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
ஆனால் இந்த விளக்கத்தை நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் நிராகரித்தனர். அவர்கள் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
கேரள மாநிலத்தின் மிக உயரமான யானையான ராமன், கோர்ட்டில் அளிக்கப்பட்ட உறுதிமொழியையும் மீறி வணிக ரீதியாக சுரண்டப்பட்டிருப்பது உண்மையிலேயே துரதிர்ஷ்டவசமானது. இந்த துணிச்சலான விதிமீறலை நாங்கள் கண்டும் காணாமல் இருந்தால், வாயில்லா ஜீவன்களுக்கு செய்யும் கடமையில் இருந்து தவறியவர்கள் ஆவோம். குறிப்பாக விலங்குகளின் நலன் மிக முக்கியமானது என்பதால் இதில் நாங்கள் வேடிக்கை பார்க்க முடியாது. எனவே கேரள அரசு உடனடியாக யானை ராமனைத் தன் வசம் எடுத்து, அதற்கு உகந்த ஒரு மறுவாழ்வு அல்லது மீட்பு மையத்தில் தங்க வைக்க வேண்டும். வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ன்படி, கேரள அரசு தனது சொந்தச் செலவிலேயே இந்த யானையைத் தற்காலிகமாகப் பராமரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.