நெல்லை,
நெல்லை பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த கிஷோர் (வயது 24), தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவரது வாட்ஸ்அப்பிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் பிரபல நிறுவனத்தின் மனிதவள மேலாளர் என அறிமுகம் செய்து கொண்ட மர்ம நபர் ஒருவர், வீட்டில் இருந்தபடியே சில ஆன்லைன் பணிகளைச் செய்வதன் மூலம் தினமும் ரூ.8 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என ஆசை காட்டியுள்ளார்.
ஆரம்பத்தில் சில படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பிய கிஷோருக்கு, கைமேல் பலன் கிடைப்பது போல சில தொகைகளை அவரது வங்கிக் கணக்கில் மர்ம நபர் வரவு வைத்துள்ளார். இதை உண்மை என்று நம்பிய கிஷோரை, டெலிகிராம் செயலியில் ஒரு கணக்கை தொடங்க வைத்து, அதில் அதிக முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என நம்ப வைத்துள்ளனர்.
இதனை நம்பி, டாக்டர் கிஷோர் தனது மற்றும் நண்பர்களின் வங்கிக் கணக்குகள் மூலம் மொத்தம் ரூ.14 லட்சத்து 71 ஆயிரம் வரை பல்வேறு தவணைகளாக செலுத்தியுள்ளார். பெருமளவு பணத்தை செலுத்திய பிறகு, கிஷோரால் ரூ.12 ஆயிரம் மட்டுமே திரும்ப எடுக்க முடிந்தது. மீதமுள்ள பணத்தை எடுக்க முயன்றபோது, மேலும் பல லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என அந்த நபர் வற்புறுத்தியுள்ளார். அதன் பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கிஷோர், நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
சைபர் கிரைம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இந்த மோசடியில் ஈடுபட்டது கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த அகில்கிருஷ்ணா(26) என்பது தெரியவந்தது. இதையடுத்து கேரளாவிற்கு விரைந்த தனிப்படை போலீசார், அகில்கிருஷ்ணாவை கைது செய்து நெல்லைக்கு அழைத்து வந்தனர். ஆன்லைன் மூலம் வரும் வேலைவாய்ப்பு செய்திகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.