தமிழக செய்திகள்

டீக்கடை மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: 5 பேர் கைது

தூத்துக்குடியை அடுத்த அத்திமரப்பட்டி பகுதியில் ஒருவர் மது குடித்துவிட்டு தெருவில் உள்ளவர்களிடம் தகராறு செய்வதாக அப்பகுதியிலுள்ள டீக்கடைக்காரர் போலீசில் புகார் அளித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டி பகுதியில் போலீசாரிடம் புகார் அளித்த ஆத்திரத்தில் டீக்கடை மீது மண்ணெண்ணெய் குண்டு வீசி தீ வைத்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசில் அளித்த புகாரால் ஆத்திரம்

தூத்துக்குடியை அடுத்த அத்திமரப்பட்டி மேல தெருவைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 40). இவர் அப்பகுதியில் சொந்தமாக டீக்கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேர்மதுரை என்பவர், போதையில் ஜெயராஜ் என்பவருக்குச் சொந்தமான ஆட்டை மிதித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயராஜ் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்த வந்தபோது, சேர்மதுரை அடிக்கடி மது குடித்துவிட்டு தெருவில் உள்ளவர்களிடம் தகராறு செய்வதாக சிவலிங்கம் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சேர்மதுரை, சிவலிங்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

டீக்கடை மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு

இந்த நிலையில், நள்ளிரவில் சேர்மதுரை மற்றும் அவருடைய நண்பர்களான வெங்கடேஷ், பாலமுருகன், முத்துராஜ், சிமியோன் ஆகிய 5 பேரும் சேர்ந்து சிவலிங்கத்தின் டீக்கடை மீது மண்ணெண்ணெய் குண்டு வீசியுள்ளனர். இதில் டீக்கடை தீப்பற்றி எரிந்து பலத்த சேதமடைந்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து தண்ணீரை ஊற்றித் தீயை அணைத்தனர்.

5 பேர் கைது

இந்த சம்பவம் குறித்து சிவலிங்கம் அளித்த புகாரின் பேரில், முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து டீக்கடையை எரித்த வழக்கில் தொடர்புடைய சேர்மதுரை, வெங்கடேஷ், பாலமுருகன், முத்துராஜ், சிமியோன் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.