சென்னை,
சென்னை கண்ணகி நகர் புதுப்பேட்டை மசூதி நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குமார், போலீசார் மனோகரன், கார்னிஸ்வரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் கண்ணகி நகரைச் சேர்ந்த விக்னேஷ் (எ) விக்னா (வயது 30) மற்றும் வேலாயுதம் (23) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா மற்றும் 40 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான விக்கேஷ் மற்றும் வேலாயுதத்திடம் நடத்திய விசாரணையில் அவர்கள் வடசென்னையில் ரெட்டேரி பகுதியில் இருந்து கஞ்சா, 10 கிராம் பாக்கெட்டுகளை தலா 500 ரூபாய்க்கு விற்று வந்தது தெரியவந்தது. மேலும் இவர்களுக்கு மும்பையில் இருந்து பெரிய அளவில் போதை மாத்திரைகள் சப்ளை செய்யப்பட்டுவதும் கண்டறியப்பட்டது.
இந்த போதை மாத்திரை கடத்தலின் பின்னணியில் தலைமறைவாக இருந்த முக்கிய புள்ளியான பிரேம்குமார் (24) என்பவரை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த அவரை கண்ணகி நகர் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கும்பல் வேறு யாருக்கெல்லாம் போதை மாத்திரைகளை சப்ளை செய்துள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.