தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்: ஒவ்வொரு எம்.எல்.ஏ.விற்கும் மாதம் இனி எவ்வளவு தொகை கிடைக்கும்..?

தமிழக முதல்-அமைச்சர் விஜய், விதி எண் 110ன் கீழ் சில முக்கியமான அறிவிப்புகளை நேற்று வெளியிட்டார்.

சென்னை,

மக்கள் பணியை தடையின்றி செய்திட ஏதுவாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும். வாகனத்துக்கு எரிபொருள், ஓட்டுநர் உள்ளிட்ட பராமரிப்புச் செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்தார்.

110 விதியின் கீழ் அறிவிப்பு

தமிழக சட்டசபை நேற்று தொடங்கியதும், பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் சில அறிவிப்புகளை செய்ய இருப்பதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.

இதையடுத்து முதல்-அமைச்சர் விஜய் எழுந்து, 110 விதியின் கீழ் 3 அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “கடந்த 12-ந்தேதியன்று காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. ஜோதிமணி பேசும் போது, எந்தவொரு பொருளாதார பலம் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்க ளாக பணியாற்றி கொண்டிருப்பவர்கள் தங்களின் தொகுதிப்பணிகளை செய்ய சொந்த வாகனங்களோ அல்லது உதவியாளர்களையோ வைத்துக்கொள்ள முடிவதில்லை என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில், எளிய பின்னணியில் இருந்து பணபலமோ, அரசியல் பின்னணியோ இன்றி மக்களின் பேராதரவோடு முதன்முறையாக சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் தலைமுறை சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

அரசு சார்பில் வாகனம்

தங்களது தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறியவும், அரசுத் திட்டங்கள் மக்களை சென்றடைவதை கண்காணிக்கவும், தங்களின் தொகுதி முழுவதும் தொடர் பயணங்களை சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டியுள் ளது.

பொருளாதார பலமில்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றும் மற்றும் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்களது மக்கள் பணியை தொய்வின்றி தொடருவதற்கு வசதியாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும்.

குறைகளுக்கு தீர்வு காண வழிவகுக்கும்

இந்த அறிவிப்பு, சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களின் பயணத்தேவைகளுக் காக பிறரை சார்ந்து இருப்பதை தடுத்து, அவர்கள் எவ்வித சமரசமும் இன்றி சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தங்களின் தொகுதிக்குட்பட்ட கிராமப்புற மற்றும் தொலைதூரப்பகுதிகளுக்கு எளிதாக பயணம் செய்து, தொகுதி முழு வதும் உள்ள மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளுக்கு தீர்வு காண வழிவகுக்கும்.

அதோடு மட்டுமின்றி, சட்டமன்ற உறுப்பினர்களின் பொருளாதார சுமையை குறைத்து, கடைகோடி மக்களுக்கு லஞ்ச லாவண்யமற்ற, நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை அளிக்கவும் உதவும்.

வாகனப்படியாக ரூ.75 ஆயிரம்

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வழங்கும் வாகனத்தை பராமரிக்கும் விதமாக, வாகனத்துக்கு டிரைவர், எரிபொருள், வாகன பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வாகனப்படியாகவும், அலுவலகப்பணிகளில் உதவி செய்ய ஒரு உதவியாளரை நியமித்துக்கொள்ள மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் உதவியாளர் படியாகவும் வழங்கப்படும். இதற்காக உரிய சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு ஆணைகள் வெளியிடப்படும்” என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்தார்.

இந்நிலையில் முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்பால், எம்.எல்.ஏ.,க்களுக்கு மாதந்தோறும் 2.05 லட்சம் ரூபாய் கிடைக்க உள்ளது.

தமிழகத்தில் 234 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சபாநாயகருக்கு, அரசு சார்பில், 'இன்னோவா' கார் வழங்கப்பட்டு உள்ளது. இவர்களை தவிர்த்து, 199 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களுக்கு கார் வாங்க தலா, 15 லட்சம் ரூபாய் வரை அரசு ஒதுக்கவுள்ளது.

இதனால், 30 கோடி ருபாய் வரை செலவாகும். எரிபொருள், உதவியாளர் சம்பளம், டிரைவர் சம்பளம், பராமரிப்பு செலவு என, 199 பேருக்கு மாதம் 2 கோடி ருபாய் வரை செலவிடப்பட உள்ளது. இதனால், ஆண்டுக்கு 24 கோடி ருபாய் செலவாகும்.

தற்போது,

எம்.எல்.ஏ.,க்களுக்கு அடிப்படை ஊதியம்: ரூ.30 ஆயிரம்

மாதாந்திர ஈட்டுப்படி ரூ.10,000

தொகுதிப்படி ரூ.25,000

அஞ்சல் படி ரூ.2500

தொலைபேசிப்படி ரூ.7500

தொகுப்புப்படி ரூ.5000

வாகனப்படி ரூ.25,000 என மொத்தம் 1,05,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

இது தவிர, மருத்துவச் செலவிற்கு மாதம் 5,000 ரூபாய்; சட்டசபை நடக்கும் நாட்களில் தனியாக படி; மாலை நேரங்களில் நடக்கும் சட்டசபை கூட்டத்திற்கு கூடுதல் படி என வழங்கப்படுகிறது. மேலும், சட்டசபை கேன்டீனில் சைவ, அவைச உணவுகள், டீ, காபி, சிற்றுண்டி ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன. சென்னையில் உள்ள எம்.எல்.ஏ., விடுதியில் இருந்து சட்டசபைக்கு வர, இலவச 'ஏசி' பஸ்களும் இயக்கப்படுகின்றன.

தற்போது டிரைவர், உதவியாளர், எரிபொருள் செலவு என கூடுதலாக 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதனால்,ஒரு எம்.எல்.ஏ., வுக்கு மாதம் 2.05 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும்.

அதே நேரத்தில், ஏற்கனவே உள்ள ஊதியத்தில் வாகனப்படியாக 25,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அந்த பணம் தொடர்ந்து வழங்கப்படுமா என்பதை நிதித்துறை முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.