சென்னை,
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் அறிக்கையில் கூறியதாவது:-
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் (ஏஐடியுசி) மாநில செயற்குழுக் கூட்டம் 06.06.2026 ஆம் தேதி, சனிக்கிழமை, திருச்சி மாநகர், உறையூர் நெசவாளர் திருமண மண்டபத்தில் சங்கத் தலைவர் நா பெரியசாமி முன்னாள் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சங்கத்தின் பொது செயலாளர் த தனசேகரன், பொருளாளர் கே. கோவிந்தராஜ், மாநில செயலாளர்கள் எம் செல்வம், ஆர் மணிகண்டன், ஆர் இளங்கோ, துணைத் தலைவர்கள் பி. பாலச்சந்தர், நெல்லை நெப்போலியன், எஸ். குமரன், கே.ஹரி கிருஷ்ணன் திருச்சி த பவளக்கண்ணன் உட்பட என்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் அமைச்சராக பொறுப்பேற்று கொண்டுள்ள கே. விக்னேஷ் 25.05.2026 ஆம் தேதி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகளை அழைத்து பேசி, துறையின் பிரச்சினைகளையும், பணியாளர்கள் எதிர் கொள்ளும் நெருக்கடிகளையும் கேட்டறிந்ததும், காலிப்பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை எதிர்த்து போராடி வந்த பத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளை 27.05.2026 ஆம் தேதி மேலாண்மை இயக்குநர் அலுவலகத்திற்கு அழைத்து பேசி, பிரச்சினைகளுக்கு ஒரு மாத காலத்தில் தீர்வுகாண நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததும் பணியாளர்களிடம் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
அமைச்சர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆகியோர் மேற்கொண்ட ஆக்கப்பூர்வ அணுகுமுறைக்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் (ஏஐடியூசி) மாநில செயற்குழு கூட்டம் நன்றி பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறது. பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் தனியார்கள் சிண்டிகேட் அமைத்து மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தது அரசின் நிதி வருவாயில் பெரும் இழப்பை ஏற்படுத்தி வந்தது.
இதனால் சமூகத்தில் உருவாகி வந்த எதிர்மறை விளைவுகளையும் கருத்தில் கொண்டு 2003 நவம்பர் மாதத்தில் மதுபானங்கள் சில்லறை விற்பனையை அரசே மேற்கொள்வது என்ற கொள்கை முடிவு எடுத்தது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் (டாஸ்மாக்) நிறுவனம் கடந்த 23 ஆண்டுகளாக மதுபான சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வருகின்றது.
மதுபானங்கள் சில்லறை விற்பனைப் பிரிவுக்காக, 2003 ஆம் ஆண்டில் வேலை வாய்ப்பு அலுவலகம் வழியாக 30 ஆயிரம் பணியாளர்கள் மதுபான சில்லறை விற்பனை பணிக்கு சேர்க்கப்பட்டனர். ஆரம்ப நிலையில் தொகுப்பூதிய முறையில் ஒப்பந்த பணியாளர்களாக சேர்க்கப்பட்டவர்களிடம் ரூ50 ஆயிரம், ரூ15 ஆயிரம், ரூ10ஆயிரம் என பாதுகாப்பு வைப்புநிதி வசூலிக்கப்பட்டுள்ளது.
மதுபானங்கள் சில்லறை விற்பனை பிரிவில் 23 ஆண்டுகள் பணி தொடர்சியுள்ள பணியாளர்களின் பணி நிலைமை வரன்முறை செய்யப்படவில்லை. நிலை ஆணை உருவாக்கப்படாத நிலையில் மாதிரி நிலையாணையும் பின்பற்றப்படவில்லை. பாதுகாப்பற்ற பணி சூழலில் பணியாளர்கள் சொல்லவொணா துயரங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்பான பணி சூழலை உருவாக்கவும், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி இருபது ஆண்டுகளாக பணியாளர்கள் போராடி வருகின்றனர். இதுவரை மாறி, மாறி அமைந்த அரசுகள் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அக்கறை காட்டவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
இந்த நிலையில் தற்போது, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜயின் சீரிய தலைமையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது உறுதியான நடவடிக்கை எடுத்து நிறைவேற்றித் தர வேண்டும் என மாநில செயற்குழு கூட்டம் கேட்டு கொள்கிறது. கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் டாஸ்மாக் பணியாளர்களின் பணிச்சூழல் முறைப்படுத்த வேண்டும் என்றும் கடந்த 23 ஆண்டுகளாக டாஸ்மாக் நிர்வாகத்திற்கு கடைகள் வர்த்தக நிறுவனங்கள் சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என மாநில செயற்குழு கூட்டம் தமிழ்நாடு அரசை கேட்டு கொள்கிறது.
காலிப்பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்திற்கு புதிய பணியாளர்களை நியமனம் செய்க சென்னை மாண்பமை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, மதுபான காலிப்பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை டாஸ்மாக் நிறுவனம் உருவாக்கியது. இத்திட்டத்தை தற்போது பணியில் உள்ள பணியாளர்களை கொண்டு செயல்படுத்துவது சாத்தியமற்றது என்பதை நடைமுறை அனுபவம் உணர்த்தியுள்ளது.
நிர்வாக நடவடிக்கையின் மூலம் நிர்பந்திக்கும் போது அமைதி நிலை பாதிப்பு ஏற்படுகிறது. இவைகளை கருத்தில் கொண்டு, காலிப்பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த தனி பணியாளர் பிரிவை உருவாக்கி, புதிய பணியாளர்களை பணியமர்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தமிழ்நாடு அரசை கேட்டு கொள்கிறது.
மதுக்கூடங்களுக்காக அரசு வழங்கிய உரிமம் வரும் ஜுன் 30 ஆம் தேதியுடன் காலாவதியாகிறது என அரசு அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் தனியாருக்கு உரிமம் வழங்குதல் அடிப்படையில் செயல்பட்ட மதுக்கூடங்கள் ஏராளமான சட்ட அத்துமீறல்கள் ஈடுபட்டு, தவறான வழிகளில் அரசின் வருவாயை மடைமாற்றி கொண்டுள்ளன. இதனை கருத்தில் தமிழ்நாடு முழுவதும் மதுக்கூடங்களை அரசே நேரடியாக ஏற்று நடத்த வேண்டும் என்றும், இதற்கான தனி பணியாளர்களை வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தேர்வு செய்து, பணியமர்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசை மாநில செயற்குழுக் கூட்டம் கேட்டு கொள்கிறது. எப் எல் 2 மற்றும் மனமகிழ் மன்றங்களை தடை செய்ய வேண்டும்.
தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் மதுபானங்கள் மொத்த கொள்முதல் மற்றும் சில்லறை விற்பனை இரண்டையும் மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ 50 ஆயிரம் கோடி வரை வரி வருவாய் பெற்று, அரசின் நிதியாதாரத்துக்கு பயன்பட்டு வருகிறது. இது தவிர நட்சத்திர விடுதிகளில் மதுபானங்கள் விற்கப்படுகின்றன.
இந்த நிலையில் எப் எல் 2, மனமகிழ் மன்றங்கள் என கடந்த 20 ஆண்டுகளாக வழங்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட உரிமங்கள் அனைத்தும் ரத்து செய்து, எப் எல் 2, மற்றும் மனமகிழ் மன்றங்களை முற்றிலுமாக தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த நடவடிக்கை எடுக்கும் வரை மனமகிழ் மன்றங்களுக்கு புல் பாட்டில் (750ml) மட்டுமே டாஸ்மாக் நிர்வாகம் சப்ளை செய்ய வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் தமிழ்நாடு அரசை கேட்டு கொள்கிறது.
முதல்-அமைச்சர் உத்தரவு படி மூடிய 717 கடை பணியாளர்களை அரசின் பிற துறைகளில் உள்ள காலி பணியிடங்களில் பணிபுரிய உத்தரவு வழங்க வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் விஜயின் உத்தரவு படி கல்வி கூடங்கள் மற்றும் வழிபாட்டு தளங்கள், பேருந்து நிலையங்களில் இருந்து சுமார் 500 மீட்டர் எல்லைக்குள் இருந்த 717 கடைகள் மூடப்பட்டன.
இந்த கடைகள் பணிபுரிந்த பணியாளர்கள் 3474 பேர்களை அரசின் பிற துறைகளில் உள்ள காலி பணியிடங்களில் கல்வி தகுதிக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தமிழ்நாடு அரசை கேட்டு கொள்கிறது.