சென்னை,
3 தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் தவெக அரசின் அலட்சிய போக்கிற்கு சீமான் தனது கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
மக்களுக்கு ஒன்று என்றால் நான் முன்னால் வருவேன் என்று சொன்ன முதல்-அமைச்சர் விஜய், கர்நாடகாவில் 3 தமிழர்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வில் உறுதியாகியும் வராமல் எங்கே சென்றார்?
கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது திட்டமிடப்பட்ட படுகொலை என்பது உடற்கூறாய்வு அறிக்கையின் மூலம் உறுதியான பிறகும்கூட, தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் விஜய் அமைதியாக கடந்து செல்வது பெருத்த ஏமாற்றமளிக்கிறது.
மூன்று தமிழர்களின் படுகொலை குறித்து நீதிவிசாரணை வேண்டுமென கூறி, கர்நாடகத்தை சேர்ந்த எதிர்க்கட்சிகளே குரலெழுப்பி வரும் நிலையில், தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு அதுகுறித்த எவ்வித அக்கறையுமில்லாது அலட்சிய போக்கோடு இதுவரை எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
சுடப்பட்ட மூன்று தமிழர்களும் 10 அடிக்கும் குறைவான தூரத்திலிருந்து சுடப்பட்டுள்ளனர் என்பதும், சுடப்பட்டவர்களில் ஒருவரான ஜான்ரோஸ் பீட்டரின் இடதுகாது பகுதியிலிருந்து நெஞ்சுப்பகுதி வரை 25 செ.மீ. நீளத்திற்கு ஆழமான காயம் கண்டறியப்பட்டுள்ளது என்றும், மற்ற இருவரின் நெஞ்சு, தொடை போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என்றும் உடற்கூறாய்வு அறிக்கையில் வெளியாகியிருக்கும் தகவல்கள் நடந்திருப்பது திட்டமிடப்பட்ட படுகொலை என்பதை உறுதி செய்கிறது.
மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநிலங்களுக்குள் சிக்கல் உருவாகியிருக்கும் இந்நேரத்தில் இது தமிழ்த்தேசிய இனத்தின் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலை. இது தமிழ்த்தேசிய இனத்திற்கு நேர்ந்த அவமானம் .
2023ஆம் ஆண்டு பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக பரவிய பொய்ப்பரப்புரைக்கு பீகாரிலிருந்து அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஏற்பாட்டின் பெயரில், கூட்டுக்குழு தமிழ்நாட்டுக்கு வந்து பீகாரிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிபடுத்திவிட்டு சென்றது. உண்மைக்கு புறம்பான செய்தியென்றாலும், தனது இன மக்களின் பாதுகாப்புக்கும், நல்வாழ்வுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் அளித்தார் அன்றைய பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார்.
2014ஆம் ஆண்டுச் சென்னை, மௌலிவாக்கத்தில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் ஆந்திராவை சேர்ந்த தொழிலாளர்கள் சிக்குண்டபோது தமிழ்நாட்டுக்கு ஓடோடி வந்தார் அன்றைய ஆந்திராவின் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு. காயம்பட்டு சிகிச்சை பெற்ற தெலுங்கு இன மக்களை மருத்துவமனையில் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி தேற்ற முனைந்தார்.
விபத்துதானென்றாலும், தனது இன மக்களுக்கு ஒரு இன்னலென்றவுடன் தமிழ்நாட்டுக்கு விரைந்து வந்தார் அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு. ஆனால் தமிழர்கள் மூன்றுபேர் கர்நாடக வனப்பகுதிக்குள் வைத்து திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டும் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் விஜய் அதனையொரு பொருட்டாகவே கருதவில்லை. மக்களுக்கு ஒன்று என்றால் நான் முன்னால் வருவேன் என்றவர் இப்பொழுது எங்கே சென்றார் என தெரியவில்லை?
இப்படுகொலையை செய்த வனத்துறையினர் மேல் கொலைவழக்கு பதிந்து கைதுசெய்யப்பட்டு உடனடியாக சிறையில் அடைக்க வேண்டுமென கேட்காது, விசாரணைக்குழு அமைக்க வேண்டுமென தமிழக முதல்-அமைச்சர் கோருவது மோசடித்தனம்! விசாரணைக்குழு அமைக்கப்பட்டால் அக்குழு வருடங்கள் கடந்து அறிக்கையை தாக்கல் செய்யும் முன் நீதிகேட்கும் குரல்கள் மறைக்கப்பட்டுவிடும்.
விசாரணைக்குழு அமைக்கக்கோருவது இதிலிருந்து தப்பிக்க கர்நாடக அரசுக்கு பாதை அமைத்து கொடுக்கும் படுபாதக செயல். தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளை பெற்று வென்ற முதல்-அமைச்சர் விஜய், எதற்காக கர்நாடக அரசுக்கு ஆதரவாக நிற்கிறார்?
தமிழர்கள் மூவரை மான் வேட்டையாடியதாக கூறி, சுட்டுக்கொன்றுவிட்டு, ‘எங்கள் மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடாதீர்கள்’ என ஆணவத்தோடும், அகம்பாவத்தோடும் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேசிய பிறகும்கூட, முதல்-அமைச்சர் விஜய் எதிர்ப்பையோ, எதிர்வினையையோ ஏன் ஆற்ற மறுக்கிறார்?
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை முழுமையாக நியாயப்படுத்தி பேசுகையில், தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் விஜய் மூன்று தமிழர்கள் படுகொலை குறித்தோ, மேகதாது அணை அமைக்கப்பட்டால் அதன்மூலம் தமிழ்நாட்டுக்கு விளையும் ஆபத்து குறித்தோ ஒரு வார்த்தைகூட பேசாதது ஏன்? இதுதான் தமிழர்களுக்காக நீங்கள் குரல்கொடுக்கிற முறையா முதல்வரே?
ஆகவே, மூன்று தமிழர்களை படுகொலை செய்த வனத்துறையினர் மீது கொலைவழக்கு தொடுத்து, அவர்களை கைது செய்து சிறைபடுத்தவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 1 கோடி ரூபாய் துயர்துடைப்புத்தொகையை பெற்று தரவும் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.