லண்டன்,
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதை அடுத்து, கடந்த 2023-ம் ஆண்டு இங்கிலாந்தின் மன்னராக மூன்றாம் சார்லஸ் பதவியேற்றுக் கொண்டார். இவர் 1948-ம் ஆண்டு நவம்பர் 14-ந்தேதி பிறந்தார். இருப்பினும் வருடத்தில் 2 முறை, அதாவது, நவம்பர் மாதத்தில் எளிமையாகவும், ஜூன் மாதத்தில் பிரம்மாண்டமாகவும் அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
இந்த நடைமுறை 1748-ம் ஆண்டு அப்போதைய இங்கிலாந்து மன்னர் 2-ம் ஜார்ஜ் ஆட்சிக்காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் வருடத்தின் இறுதி மாதங்களில் கடுமையான குளிர் வாட்டி வதைக்கும். இதனால் குளிர் அல்லது மழைக்காலங்களில் அரச குடும்பத்தினரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை பிரம்மாண்டமாக நடத்த முடியாது. எனவே, கோடை காலத்தில், குறிப்பாக ஜூன் மாதத்தின் 2-வது சனிக்கிழமையில் பிரம்மாண்டமான பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, இன்றைய தினம் லண்டனில் இங்கிலாந்து மன்னர் சார்லஸின் பிறந்தநாள் கொண்டாட்டமானது, உலகப் புகழ்பெற்ற 'ட்ரூப்பிங் தி கலர்' (Trooping the Colour) எனப்படும் ராணுவ அணிவகுப்புடன் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் இங்கிலாந்து ராணி கமிலா, வேல்ஸ் இளவரசர் வில்லியம், இளவரசி கேட் மிடில்டன் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் பங்கேற்றனர்.
இந்த விழாவின் ஒரு பகுதியாக ஹாலிவுட் நடிகை ஹெலன் மிரெனுக்கு ‘கம்பேனியன் ஆப் ஹானர்’(Companion of Honour) என்ற கவுரவ பட்டம் வழங்கப்பட்டது. இவர் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘தி குயீன்’(The Queen) என்ற படத்தில் ராணி 2-ம் எலிசபெத் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்காக ஹெலன் மிரெனுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.