திருப்பூர்,
பின்னலாடை தயாரிப்புக்கான ஒசைரி நூல் விலை கிலோவுக்கு ரூ.5 உயர்ந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் பஞ்சு விலை தொடர்ந்து உயரத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, நம் நாட்டிலும் பஞ்சு விலை உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, ரூ.68 ஆயிரமாக இருந்த ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு, ரூ.70 ஆயிரமாக விலை உயர்ந்துள்ளது. அதேபோல், பின்னலாடை தயாரிப்புக்கான ஒசைரி நூலும் கிலோவுக்கு ரூ.5 அதிகரித்துள்ளது. கடந்த மாத (ஜூன்) தொடக்கத்தில், ஒசைரி நூல் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்தது. ஆனால், கடந்த 22-ந் தேதி ரூ.5-ம், நேற்று ரூ.5-ம் விலை உயர்ந்து பழைய நிலையை எட்டியுள்ளது.
நூல் விலை தொடர்ந்து இவ்வாறு உயர்வதால், உற்பத்தி செலவு அதிகரித்து, நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்படுவதாக ஜவுளி தொழில் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். நூல் விலை உயர்வு குறித்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறும்போது, "பஞ்சு இறக்குமதிக்கான வரி விலக்கு குறுகிய காலத்திற்கு அளிக்கப்படுவதால் எந்தப் பயனும் இல்லை. தற்போதைய விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், 2027 பிப்ரவரி மாதம் வரையிலான வரி விலக்கு சலுகை நீட்டிக்கப்பட வேண்டும்" என்று கூறினர்.