திண்டுக்கல்,
கொடைக்கானலுக்கு ஏப்ரல், மே மாதங்களில் சீசனையொட்டி சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம். இந்த ஆண்டு தற்போதே வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதால் கொடைக்கானலுக்கு வழக்கத்தை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் இங்கு இயற்கை எழில் காட்சிகளை பார்த்து ரசித்தாலும் நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்வர். கொடைக்கானல் மேல் மலை கிராமமான மன்னவனூர் சுற்றுச்சூழல் மையம், ஆட்டுப்பண்ணை ஆராய்ச்சி மையம், பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில், இயற்கை எழில் காட்சி பகுதிகள், கூக்கால் ஏரி, அப்பர் லேக் வியூ, பசுமை பள்ளத்தாக்கு, பாம்பார் அருவி, பூம்பாறை செல்லும் சாலையான பழனி எழில் காட்சி, கைகாட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல வாய்ப்புள்ளது. எனவே முன்னேற்பாடாக கொடைக்கானலை சுற்றியுள்ள தூண்பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம், பேரிஜம் ஏரி போன்ற சுற்றுலா தலங்கள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.