கொடைக்கானல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள அனைத்து வனத்துறை சுற்றுலா இடங்களுக்கும் கடந்த ஜனவரி 12-ம் தேதி முதல் ஒரே இடத்தில் ‘கியூஆர் கோடு’ மூலம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையால் விடுமுறை நாட்களில் பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பாதிக்கின்றனர். எனவே, பழைய முறைப்படி அனைத்து வனத்துறை சுற்றுலா இடங்களுக்கும் அந்தந்த இடத்திலேயே தனித்தனியாக நுழைவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி, ஏப்ரல் 19-ம் தேதி கொடைக்கானலில் அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் வாகனங்களை இயக்காமல் பேருந்து நிலையத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில், 5 நாட்களுக்குள் வனத்துறை சுற்றுலா இடங்களில் தனித்தனியாக நுழைவு கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
தற்போது கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் அங்கு படையெடுத்து வருகின்றனர். அதனால் கொடைக்கானல் நகர் மற்றும் அனைத்து சுற்றுலா இடங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, அனைத்து வனத்துறை சுற்றுலா இடங்களுக்கும் பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் நுழைவு கட்டணம் வசூலிக்கும் முறை தொடர்வதால் அப்பகுதியை சுற்றுலா வாகனங்கள் கடந்து செல்ல குறைந்தது 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரமாகிறது. அதனால் மலைச்சாலையில் வாகனங்கள் 15 கி.மீ., தூரத்துக்கும் மேல் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி அன்றாட பணிகளுக்கு செல்லும் உள்ளூர் மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று (01.05.2026) காலை முதல் வனத்துறை நுழைவு கட்டணம் வசூலித்து வரும் பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையின் குறுக்கே சுற்றுலா வானங்களை நிறுத்தி வைத்தனர். இதனால் அந்த வழியாக வாகனங்களில் சுற்றுலா பயணிகள் செல்ல முடியாமல் தவித்தனர். தற்போது பலர் வாகனங்களிலேயே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கொடைக்கானலில் அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வாகனங்களுக்கு மே 3ம் தேதி வரை இலவச அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி கொடைக்கானலில் நாளை (02.05.2026), நாளை மறுநாள் (03.05.2026) தூண்பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கத்துக்கு கட்டணமின்றி செல்லலாம் என்று அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் 4ம் தேதி முதல், கொடைக்கானலில் 5 இடங்களில் வரிசையில் நிற்காமல் உடனடியாக ‘கியூஆர் கோடு’ மூலம் டிக்கெட் பெறும் நடைமுறை செயல்படுத்தப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் ஆன்லைன் கட்டண வசூலிப்பு முறையால் காலதாமதம் ஏற்படுவதாக குற்றம்சாட்டி, சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.