நயினார் நாகேந்திரன் 
தமிழக செய்திகள்

கொடுங்கையூர் நச்சுவாயு மரணம்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். - நயினார் நாகேந்திரன்

கழிவுநீர் தொட்டியை மாநகராட்சி நீண்ட நாள்களாக பராமரிக்காமல் இருந்ததே இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சென்னை,

கொடுங்கையூர் நச்சுவாயு மரணம்: தொழிலாளர்களின் உயிரோடு விளையாடும் ஜோசப் விஜய் அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனத்தை தெரிவித்தார். இது தொடர்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-

வேதனை அளிக்கிறது

சென்னை கொடுங்கையூரில் மழைநீர் நீரேற்று தொட்டியை சரிசெய்ய இறங்கிய நவீன்குமார், அஸ்மத் பாஷா ஆகிய இரு அப்பாவி தொழிலாளர்கள் நச்சுவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

கண்டனம்

முறையான பாதுகாப்பு உபகரணங்கள் எதையும் வழங்காமல், 20 அடி ஆழமுள்ள ஆபத்தான தொட்டிக்குள் தொழிலாளர்களை இறங்க வைத்து அவர்களின் உயிரோடு விளையாடியுள்ள ஜோசப் விஜய் அரசின் அலட்சியப் போக்கிற்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

ஜோசப் விஜய் அரசு

கழிவுநீர்த் தொட்டியை மாநகராட்சி நீண்ட நாள்களாக பராமரிக்காமல் இருந்ததே இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. "பருவமழைக்குத் தயார்" என்று ஊடகங்களில் படம் காட்டி வரும் ஜோசப் விஜய் அரசின் பசப்பு வார்த்தைகள், இந்த கொடுங்கையூர் கோரச் சம்பவத்தின் மூலம் சுக்குநூறாக உடைந்துபோயுள்ளன. மழை தொடங்குவதற்கு முன்பே இரு அப்பாவி தொழிலாளர்களின் உயிரை குடித்துவிட்ட இந்த நிர்வாக குளறுபடிக்கு அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?

ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்

அநியாயமாக பறிபோன இந்த உயிர்களுக்கு முழு பொறுப்பேற்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க ஜோசப் விஜய் அரசு முன்வர வேண்டும். அலட்சியம் காட்டிய மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது தயவுதாட்சண்யமின்றி வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். ஏழைத் தொழிலாளர்களை மரணக் குழியில் தள்ளும் இந்த நிர்வாக அவலத்தை தவெக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT